Bigg Boss 7 Tamil: தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் மக்களால் அதிகம் விரும்பப்படும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது சில தரப்பினர் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.


ஆனால் பெருவாரியான மக்களின் வரவேற்பு இந்த நிகழ்ச்சியை 7ஆவது சீசனுக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியால் சினிமாவில் கால் பதித்தவர்களை கண்முன்னே காணமுடிகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அதாவது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியான திரைப்படங்களில் மூன்று திரைப்படங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்தவர்களின் படங்கள்தான். ஆமாம் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’, தர்ஷனின் ‘நாடு’ மற்றும் பாலாவின் ‘வா வரலாம் வா’ ஆகிய படங்கள் திரையரங்கில் ஓடிக்கொண்டு உள்ளது. 


தற்போது நடைபெற்று வரும் 7வது சீசனில் உள்ள மிகவும் முக்கியமான போட்டியாளர் என்றால் கூல் சுரேஷ். இவர் ஏற்கெனவே சினிமாக்களில் நடித்திருந்தாலும் சமூக வலைதளங்களில் குறிப்பாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாவதற்கு முன்னர் ”வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்த போடு” என அனைத்து கூட்டங்களிலும் கூறி அந்த படத்திற்கு புரோமோஷன் செய்ததோடு தன்னையும் நன்றாக புரோமோட் செய்துகொண்டார்.


அதேபோல் மற்ற படங்களுக்கும் அவ்வாறே கூறிக்கொண்டும் வந்தார். சில் சமயங்களில் இவரது செயல்பாடுகள் மக்களை அல்லது அவருடன் இருப்பவர்களையோ கூட மிகவும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கும்படியாக நடந்து கொண்ட வீடியோக்கள் எல்லாம் இன்றைக்கும் சமூக வலைதளங்களில் உள்ளன. ஆனால் இப்படியான கூல் சுரேஷ் பெருவாரியான மக்கள் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் தாக்குபிடிக்க வாய்ப்பே இல்லை. எப்படியும் இரண்டிலிருந்து மூன்றாவது வாரத்தில் வெளியேறி விடுவார். இல்லையென்றால் அதிகபட்சம் ஒரு மாதம். அதன்பின்னர் எல்லாம் இந்த ’பீஸ்’ பிக் பாஸில் தாக்குப்பிடிக்காது என பலர் யூகித்தார்கள். ஆனால் இன்றுடன் அதாவது டிசம்பர் 3ஆம் தேதியுடன் 64வது எப்பிசோடுகள் கடந்து 65வது நாள் பிக்பாஸ் வீட்டில் நீடிக்கிறார் என்பதைவிட சிறப்பாக விளையாடுகின்றார் என்றே கூறவேண்டும். 




போட்டி தொடங்கிய முதல் இரண்டு வாரங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல் மிகவும் கோளாறாகத்தான் விளையாடி வந்தார். ‘தமிழன்டா’ என கத்திக்கொண்டு இருந்தது நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு இடையூறாக இருந்தது. ஒரு சில வார்த்தைகளை விட்டதெல்லாம் ஏற்புடையதாக இல்லை. இப்படியான நிலையில் அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் கூல் சுரேஷின் கேம் ப்ளான் மெல்ல மெல்ல மாறியது. அதாவது  மற்ற போட்டியாளர்கள் கேம் ப்ளான் என்பது மற்றவர்களை காலி செய்து மக்கள் மத்தியில் தன்னை மிகவும் திறமையான போட்டியாளர் என வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.


ஆனால் கூல் சுரேஷின் கேம் ப்ளானாக இருப்பது தனக்கு கிடைக்கும் நேரத்தில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை உண்டாக்கி மக்களுக்கு நல்ல எண்டெர்டெய்னராக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து விளையாடி வருகின்றார். பிக்பாஸில் கூல் சுரேஷ் இதுவரை செய்த பிரச்னைகள் எது எது என பார்வையாளர்களை கேள்வி கேட்டால், ஓரிரு நிகழ்வுகளை மட்டுமே கூறுவார்களே தவிர மற்றவர்களைப் போல் வரிசைப்படுத்தும் அளவிற்கு பிரச்னை செய்யவில்லை. 


பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் கூட தவறைச் சுட்டிக்காட்டவே உரிமைக்குரல் தூக்கினாரே தவிர குழுவாக இணைந்து ரெட் கார்டு வழங்கவில்லை. பிரதீப் வெளியேற்றப்பட்ட பின்னர்கூட அதனை எண்ணி மிகவும் வருந்தினார். ஒரு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைக்கவேண்டிய விஷயங்களுக்காக குரல் கொடுக்கின்றார்.


அவருக்கு பிக் பாஸ் வீட்டில் 'பதனி’ என்ற பட்டப்பெயர் வழங்கியுள்ளார்கள். கூல் சுரேஷூக்கு இந்தப் பெயர் பொருந்திப் போகின்றது என நம்மில் பலர் யோசித்தாலும் பதனி எப்போதும் தனியாகத்தான் தனது செயல்பாட்டினை செய்வார்? அதுபோலவே கூல் சுரேஷ் விளையாடி வருகின்றார். பிரதீப் விஷயத்திலும் கூட வாரக் கடைசியில் கமல்ஹாசனிடம் ஹவுஸ்மேட்ஸ் இணைந்து உரிமைக்குரல் தூக்கவில்லை என்றாலும், சுரேஷ் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி இருப்பார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தனது குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் சுரேஷ், தனது குடும்பத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும்போது ஒரு குடும்பத்தலைவனாக பாசக்கார மனம் கொண்ட தமிழ்நாடு மக்களின் மனதினை தொட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். 


65 நாட்கள் சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள கூல் சுரேஷ், பிக்பாஸ் சீசன் செவன் டைட்டிலை வெல்லுவாரா அல்லது வெல்லமாட்டாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் இதேபோல் சிறப்பாக விளையாடினால் இறுதியாக வீட்டில் இருந்து வெளியேறும் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. பெயருக்கு ஏற்றபடி கூலாக விளையாடும் கூல் சுரேஷுக்கு வாழ்த்துகள்!