ஒரு பெரிய தலையை இழந்து விட்டோம் என விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் ராதாரவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சென்னைக்கு நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள்,தேமுதிக தொண்டர்கள் என பலரும் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் உடல் பகல் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மாலை 4.45 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இப்படியான நிலையில் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் விஜயகாந்தின் நண்பர்களாக வலம் வந்தவர்கள் யார் என பார்த்தால் அது ராதா ரவி, வாகை சந்திரசேகர், பாண்டியன், தியாகு இந்த 4 பேர் தான். விஜயகாந்துடன் சேர்த்து கிட்டதட்ட தமிழ் சினிமாவில் “5 ஸ்டார்” குரூப் ஆக வலம் வந்தார்கள்.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்ததும் நடிகர் தியாகு கண்ணீரும் கவலையுமாக ஓடோடி வந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. இன்று நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வாகை சந்திரசேகர் பேசும்போது, “எங்களோடது 45 ஆண்டு கால நட்பு. இத்தனை ஆண்டுகளில் கலைத்துறையில் ஒன்றாக வந்து, வாய்ப்பு தேடி அலைந்து, ஒன்றாக வெற்றி பெற்று, அதன்பிறகு தோல்வி, அதில் இருந்து எழுந்து ஒரு போராட்டமான வாழ்க்கையை கலைத்துறையிலும், அரசியல் துறையிலும் சந்தித்தவர் தான் அண்ணன் விஜயகாந்த்.
அதாவது எங்களுக்கு எல்லா வகையிலும் திரைத்துறையில் நண்பர்களாக இல்லாமல், குடும்ப விஷயங்களிலும் நாங்கள் கலந்து இன்ப, துன்பங்களிலேயே பங்கு பெற்றவர்கள். ஒரு பெரிய சகாப்தம் முடிஞ்சு போச்சு. மனிதநேயமிக்க அற்புதமான நண்பர். தமிழ் மொழி மீது மிகுந்த பாசம் கொண்டவரை இழந்து தவிக்கின்றோம். அவர்கள் குடும்பத்தினருக்கு, ரசிகர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகர் ராதாரவி, “என் அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்க மொத்தம் 5 பேரு. ஒரு பெரிய தலையை இழந்து விட்டோம். அவன் என்னைய விட்டு பிரிவான்னு கொஞ்சம் கூட நாங்கள் எதிர்பார்க்கல” என கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.