Vijayakanth: விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவிய வதந்தியால் அதிர்ச்சி அடைந்த திரைப்பட வசனகர்த்தா வேலுமணி உயிரிழந்தார்.
விஜயகாந்தை நினைத்து வேதனையில் வசனகர்த்தா உயிரிழப்பு:
தேமுதிக விஜயகாந்த் கடந்த 18ம் தேதியில் இருந்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகவும், சுவாசிக்க சிரமப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கைகள் வெளியாகின. இதனால் விஜயகாந்திற்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
மற்றொரு பக்கம் விஜயகாந்த் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வரும் திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவரை நேரில் சந்தித்தும் வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பரவிய வதந்தியால், திரைப்பட வசனகர்த்தாவான வேலுமணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் படத்திற்கு வசனம்:
கடலூரைச் சேர்ந்த வேலுமணி 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் பணியாற்றி வந்துள்ளார். கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய வேலுமணி, அவரது புத்தகங்களை பிரதி எடுத்து கொடுத்துள்ளார். வைரமுத்துவின் மூன்றாம் உலகம் புத்தகம் உருவாவதற்கு வேலுமணி உறுதுணையாக இருந்துள்ளார்.
வைரமுத்துவிடம் பணியாற்றி வந்ததற்கு இடையே, பூவெல்லாம் கேட்டுபார், ரிதம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். தொடந்து விஜயகாந்த் நடித்த தேவன் படத்தில் வசனம் எழுவதியுள்ளார். வேலுமணியின் தெளிவான வசனத்தால் ஈர்க்கப்பட்ட விஜயகாந்த், தான் நடித்த எங்கள் ஆசான், விருதகிரி உள்ளிட்ட படங்களுக்கு வேலுமணியை வசனம் எழுத வைத்துள்ளார்.
மாரடைப்பால் உயிரிழப்பு:
வேலுமணிக்கு விஜயகாந்திடம் இருந்த நட்பு சினிமாவையும் தாண்டி அரசியல் வரை நீண்டுள்ளது. அரசியல் தொடர்பான மேடை பேச்சுகள் குறித்தும் வேலுமணியிடம் விஜயகாந்த் ஆலோசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த விஜயகாந்தை சில முறை வேலுமணி சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார். ஆனால், சில மாதங்களாக விஜய்காந்தை பார்க்காமல் இருந்த வேலுமணிக்கு நேற்று மாலை அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. விஜயகாந்த் மிகவும் மோசமான மனநிலையில் இருப்பதாக செய்தி பரவியதை அறிந்த வேலுமணி மனமுடைந்து கடலூரில் உள்ள வீட்டில் சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத வேலுமணியின் இறப்புக்கு திரை பிரபலங்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, விஜயகாந்த் பற்றி பேசிய பிரேமலதா, “கேப்டன் நன்றாக இருக்கிறார். நீங்கள் யாரும் கேப்டன் உடன் இல்லை. நான் தான் இருக்கிறேன். ஏன் தொடர்ந்து வதந்தியை பரப்புகிறீர்கள். கேப்டனை பற்றி இந்த அளவுக்கு வன்மம் ஏன்? தவறான செய்தியை போட வேண்டாம் பலமுறை உங்களிடன் கேட்டுக் கொண்டேன். கேப்டன் மீதும் எங்கள் மீதும் உங்களுக்கு என்ன வன்மம்? நல்லா இருக்கும் மனிதனை ஏன் இப்படி? அது எந்த அளவுக்கு பாதிக்கும்? ஊர் வாயை எப்படி மூட முடியும்? என பேசியுள்ளார்.