Captain Prabhakaran Box Office Collection: தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகவும் பதவி வகித்தவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். கேப்டன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்திற்கு அந்த பட்டத்தைப் பெற்றுத் தந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்த படத்திற்கு பிறகே கேப்டன் விஜயகாந்த் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். 

Continues below advertisement

கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ்:

அவரது 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 100வது படமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ரஜினி, கமலுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை தனக்கென்று வைத்திருந்தவர். தற்போதும் விஜயகாந்திற்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். 

இதனால், கேப்டன் பிரபாகரன் படம் திரையிடப்பட்ட நாள் முதல் தற்போது வரை தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பல  திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. காட்டில் மறைந்து வாழும் சூரபத்ரனை தேடிக்கண்டுபிடித்து கைது செய்யும் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜயகாந்த் நடித்திருப்பார். வீரப்பனை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. 

Continues below advertisement

100வது படம் ப்ளாக்பஸ்டர்:

ரஜினியின் 100வது படமான ஸ்ரீராகவேந்திரா, கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வை படங்கள் ஓடாத நிலையில், விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எம்ஜிஆரின் 100வது படமான ஒளி விளக்கு, சிவாஜியின் 100வது படமான நவராத்திரி ஆகிய படங்கள் மட்டுமே ஒரு நடிகருக்கு 100வது படம் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வரிசையில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு 100வது படத்தை வெற்றிப்படமாக கொடுத்த கதாநாயகன் நடிகர் விஜயகாந்த் மட்டுமே ஆவார். 

அன்று தமிழ் சினிமாவை கலக்கிய ஆர்கே செல்வமணி இயக்கிய திரைப்படம் கேப்டன் பிரபாகரன். ராவுத்தர் ப்லிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். லியாகத் அலிகான் வசனம் எழுதியிருப்பார். இந்த படத்திற்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் நினைவாக கேப்டன் பிரபாகரன் என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

அள்ளும் கலெக்ஷன்:

விஜயகாந்த், எம்என் நம்பியார், சரத்குமார், லிவிங்ஸ்டன், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், காந்திமதி, பீலி சிவம், மன்சூர் அலிகான், பொன்னம்பலம், எல்ஐசி நரசிம்மன் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். 

1991ல் வெளியான இந்த படம் அன்றும் வசூல் மழையை குவித்த கேப்டன் பிரபாகரன் படம் இன்றும் வசூல் மழையை குவித்து வருகிறது. கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், ஏ சான்றிதழ் என்பதாலும் குடும்பத்துடன் சென்று பார்க்க சிரமமாக உள்ளது. இந்த சூழல் கேப்டன் பிரபாகரனுக்கு சாதகமாகவும் இருப்பதால் முதல் நாள் 42 லட்சத்தையும், 2வது நாள் 86 லட்சம், 3வது நாள் ரூபாய் 1.30 கோடியை குவித்துள்ளது. 

2 கே கிட்ஸ் கொண்டாட்டம்:

நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. கூலி படத்திற்கு சவால் அளிக்கும் வகையில் ரி ரிலீசில் கேப்டன் பிரபாகரன் வசூலில் அசத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

இன்றைய 2 கே இளைஞர்கள் பலரும் விஜயகாந்த்தின் படத்தை நேரில் திரையில் பார்த்ததில்லை என்பதால் விஜயகாந்தின் திரை செல்வாக்கை நேரில் காண தியேட்டரில் குவிந்து வருகின்றனர். படத்தில் உள்ள ஆட்டமா தேரோட்டமா? பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.