தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களின் வரிசையில் நிச்சயம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கோடான கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் குடியிருப்பவர் கேப்டன் விஜயகாந்த். தற்போது அவர் உடல்நலம் சரியில்லாமல் சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பல வதந்திகள் அவரின் உடல் நலம் குறித்து பரவி வருகின்றன. அவர் நலமாக வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்களும், திரை பிரபலங்களும் பிராத்தனை செய்து வருகிறார்கள்.
கேப்டன் விஜயகாந்த் ஒரு பிரபலமான நடிகராக, தே.மு.தி.க கட்சியின் தலைவருமாக இருந்த போதிலும் மிகவும் எளிமையானவராக, மனித நேயம் கொண்டவராக இருந்து வந்தார். தான் ஒரு செலிபிரிட்டி என்ற கர்வம் சிறிதும் இல்லாமல் அனைவரையும் ஒன்று போல நடத்துவதில் அவருக்கு இணையாக யாருமே இருக்க முடியாது. அவரின் உடல்நலம் சில ஆண்டுகாலமாகவே சரியில்லாமல் இருந்த காரணத்தால் அரசியல் கட்சி பணிகளிலும், நடிப்பிலும் ஈடுபடாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
தற்போது அவரின் உடல்நிலை சீராக இல்லை என வெளியாகும் தகவல்கள் அவர் நடிகர் சங்க தலைவராக இருந்த போது அவர் செய்த நல்ல விஷயங்கள், அவர் கட்சி மீட்டிங் சமயத்தில் மேடையில் பேசிய வீடியோ உள்ளிட்டவையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டு அவர் ஆற்றிய தொண்டின் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இறுதி ஊர்வலத்திற்காக நடிகர் திலகத்தின் உடல் வண்டியில் ஏற்றப்படும் போது விஜயகாந்த் ஒரு நடிகர் என்ற பந்தா சிறிதும் இல்லாமல் பணியாளர்களுடன் இணைந்து அவரும் மேலே ஏற்றி வைக்க உதவி செய்தார். இறுதி ஊர்வலத்தின் போது ரசிகர்கள் கூட்டம் கடல் போல அலைமோதியது. அப்போது காவல் துறையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அடக்கமுடியாமல் திணறினார்கள். அந்த சமயத்தில் விஜயகாந்த் களத்தில் இறங்கி ரசிகர்களை கையாண்ட வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் நடித்த படங்களில் அவர் எப்படி கம்பீரத்துடன் இருப்பாரோ அதேபோல தான் அவர் நிஜ வாழ்க்கையிலும் கம்பீரமானவராக வாழ்ந்தவர். இன்று அவர் இப்படி முடங்கி போய்விட்டாரே என மக்கள் கலக்கி போய் இருக்கிறார்கள். அவர் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மியாட் மருத்துவமனை தரப்பில் இருந்து வந்துள்ள செய்தியின் படி விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மருத்துவமனை முன்பு தேமுதிக தொண்டர்கள் அதிகம் பேர் வரக்கூடும் என்பதால் அதை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானதில் இருந்து பரபரப்பு அதிகரித்துள்ளது.