31 years of vijayism: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் திரைத்துறைக்கு வந்து இன்றோடு 31 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
வாரிசு நடிகர்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய், அவரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து அப்பா சினிமாவில் அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய இயக்குநர். ஆக, வாரிசு நடிகராகவே கணக்கிடப்பட்டார். சினிமாவில் எல்லா துறைகளிலும் வாரிசுகள் களமிறக்கப்பட்டாலும் இங்கு திறமைக்கு மட்டுமே மரியாதை என்பதை பலரும் நிரூபித்திருக்கிறார்கள். அதில் விஜய்யும் ஒருவர்.
இதெல்லாம் ஒரு மூஞ்சியா என 1992 ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘நாளைய தீர்ப்பில்’ விமர்சிக்கப்பட்ட நடிகர் விஜய், 1996 ஆம் ஆண்டு பூவே உனக்காக வெளியான போது, இவனுக்கு நடிக்க எல்லாம் வருமா என வியக்க வைத்தார். இன்று விஜய் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை கொண்டாடப்பட காரணம் ஆரம்ப காலத்தில் அவர் தேர்வு செய்து நடித்த சில படங்கள் தான். அவை பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே, குஷி ஆகிய படங்கள் தான்.
அதிகம் வெறுக்கப்பட்ட நடிகர்
காலத்தின் போக்கில் விஜய் தனது பாதையை காதல் கதையில் இருந்து ஆக்ஷன் பக்கம் நகர்த்தினார். ஆனால் முந்தைய காதல் படங்களால் விஜய் தவிர்க்க முடியாத நடிகராக மாறி விட்டதால், களத்தை மாற்றினாலும், ரசிகர்கள் தங்கள் ஆஸ்தான ஹீரோ இடத்தில் இருந்து அவரை மாற்றவில்லை. இந்த காலக்கட்டத்தில் விஜய் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழத் தொடங்கியது. குறிப்பாக 2007 ஆம் ஆண்டில் இருந்து கிட்டதட்ட 2012 ஆம் ஆண்டு முதல் பாதி வரை விஜய்க்கு அடுத்தடுத்து வெளியானது எல்லாமே தோல்வி படங்கள். இதனால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். அப்படி விமர்சிக்கப்பட்டவர்களை, வெறுக்கப்பட்டவர்களை பிற்காலத்தில் தன்னை லைக் செய்யும்படி வைத்தது விஜய்யின் ஸ்மார்ட்டான நகர்வுகளில் ஒன்று.
மேலும் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பிற துறைகளிலும் சாதித்துள்ளார். அதேசமயம் விஜய்யை போல் தமிழ் சினிமாவில் டான்ஸ் யாரும் ஆட முடியாது என்ற சிறப்பை 49 வயதிலும் தன்னகத்தே தக்க வைத்துள்ளார். கோலிவுட் திரையுலகில் ரூ.100 கோடி அதிகம் வசூல் செய்த படங்களில் அதிக இடத்தை பிடித்துள்ளது விஜய்யின் படங்கள் தான். இப்படி வயது வித்தியாசமில்லாத ரசிகர்கள், வசூலை குவிக்கும் படங்கள் என்பது விஜய்யை கோலிவுட்டின் டாப் ஹீரோவாக மாற்றியுள்ளது.
என்றுமே தளபதி
இளைய தளபதியாக வலம் வந்த நடிகர் விஜய் ஒரு கட்டத்தில் “தளபதி” விஜய் ஆக ப்ரோமோஷன் ஆகிறார். மேலும் 2012 ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி படத்தில் தொடங்கி அவரின் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்திப்பது வாடிக்கையாகி விட்டது. விஜய் படமா, இதில் என்ன சர்ச்சையை தேடலாம் என பலரும் ரெடியாகி விட்டனர். ஆனாலும் அசராமல் தனது ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்ததாக அரசியலிலும் விரைவில் அடியெடுத்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன் விஜய்க்காக பலரும் காத்திருக்கின்றனர்.