மதுரையில் ஒரு ரைஸ் மில்லை நிர்வகித்து வந்த ஒருவர் சினிமா மீது இருந்த தீராத காதலால் சென்னைக்கு வந்து படாத பாடுபட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி ஏராளமான அவமானங்களை சந்தித்த பிறகு "தூரத்து இடி முழக்கம்" திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர் கே. விஜயன். அன்று முதல் விஜயராஜ் விஜயகாந்த் அவதாரம் எடுத்தார். 


விஜயகாந்த் பிறந்தநாள் :


தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்ததால் வெற்றி ஒன்றை எட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த விஜயகாந்துக்கு அதே போன்ற ஒரு இக்கட்டான சூழலில் இருந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் "சட்டம் ஒரு இருட்டறை" படத்தில் வாய்ப்பளித்தார். அப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. விஜயகாந்தின் முதல் வெற்றியும் கூட. கருப்பு தங்கம் என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த கருப்பு தங்கத்தின் 71வது பிறந்தநாள் இன்று. 


 



ஆக்‌ஷன் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்ற விஜயகாந்த் ஸ்டைலை மாற்றி காட்டியது 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படம். அதை தொடர்ந்து பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வசூல் சக்கரவர்த்தி என்ற இடத்தை கைப்பற்றினார்.


நல்ல மனம் படைத்தவர் :


இயல்பாகவே உதவும் குணம் கொண்ட விஜயகாந்த் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். அப்படி பல இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலருக்கும் உதவியுள்ளார். அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா உள்ளிட்டோரின் ஆரம்ப காலகட்டங்களில் கைகொடுத்துள்ளார் நடிகர் விஜயகாந்த். 


பொதுவாக அன்றைய காலகட்டத்தில் பெரிய அளவில் பிரபலமான  நடிகர்கள் அவ்வளவு எளிதாக மற்ற நடிகர்களின் திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு சூழல் இருந்த சமயத்தில் கூட விதிவிலக்காக பல வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் எந்த தயக்கமும் இன்றி நடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.


விஜய்க்கு கிடைத்த பிரேக் :


எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் கேப்டனுக்கு இடையே நல்ல ஒரு நட்பு இருந்தது. எஸ்.ஏ.சியின் இயக்கத்தில் 15க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தனியாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அந்த சமயத்தில் நண்பனின் மகனான விஜய்காக சம்பளமே வாங்காமல் விஜயகாந்த் நடித்த படம் தான் 'செந்தூரப்பாண்டி'. இப்படம் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 


சூர்யாவுக்கு செய்த உதவி :
 
அதே போல சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான 'மாயாவி' படத்தில் சூர்யாவின் விருப்பத்திற்காக அப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் விஜயகாந்த். அது மட்டுமின்றி சூர்யா சினிமாவில் அடியெடுத்து வைத்த சமயத்தில் 'பெரியண்ணா' திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.