வாரிசு படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் தனக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் உருக்கமான பதிவு ஒன்றையும் பாடலாசிரியர் விவேக் பகிர்ந்துள்ளார்.


பூ அவிழும்பொழுது முதல் மேகமோ அவள் வரை....


பூ அவிழும்பொழுது, ஏ சுழலி, ஏ சண்டைக்காரா, வாடி ராசாத்தி, வா ரயில் விட போலாமா, மேகமோ அவள் என தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களுக்கு மிக அழகான வரிகளைத் தந்து தன் வார்த்தைகளின் வழியே கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தவர் பாடலாசிரியர் விவேக்.


நடிகர் விஜய்க்கு கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான பாடல் வரிகளைத் தந்து அவருடன் நல்ல நட்புறவு பாராட்டியும் வருகிறார் பாடலாசிரியர் விவேக்.


விஜய் - விவேக் காம்போ


மெர்சல் படத்தில் இடம்பெற்ற மெர்சல் அரசன், சர்க்கார் படத்தில் சிம்டாங்காரன், பிகில் படத்தில் சிங்கப்பெண்ணே என தொடர்ந்து ஹிட் பாடல்களை எழுதி விஜய்யின் விருப்பமான பாடலாசிரியராக உருவெடுத்திருக்கும் விவேக், சமீபத்தில் வெளியான வாரிசு படத்திலும் ரஞ்சிதமே, தீ தளபதி என ஹிட் பாடல்களால் கவனமீர்த்துள்ளார்.


இந்தப் பாடல்களுக்காக நடிகர் விஜய்யிடமிருந்து ஸ்பெஷல் பாராட்டுகளையும் விவேக் பெற்றுள்ளார். இந்நிலையில் வாரிசு ஷூட்டிங்கின்போது விஜய் தனக்கு முத்தமிடும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து உருக்கமாக விவேக் பதிவிட்டுள்ளார்.


கலைப்பயணத்தின் அழகான தருணம்


“சில பந்தங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. உங்களுடனான இந்த நம்ப முடியாத பயணத்தில், நீங்கள் என்னை ஒரு மூத்த சகோதரனைப் போல நேசித்தீர்கள், கவனித்துக் கொண்டீர்கள். 


நான் எப்போதும் விரும்புவது உங்களைப் போன்ற சிறந்த ஆன்மாவுக்கு சிறந்த விஷயங்கள் நடக்க வேண்டும் என்பதுதான். எனது கலைப் பயணத்தில், இந்த அழகான தருணத்தை எதுவும் முறியடிக்கவில்லை. 


உயிருக்கு உயிராக உங்களை நேசிக்கிறேன் மை தளபதி” எனப் பதிவிட்டுள்ளார். விவேக்கின் இந்தப் பதிவு ட்விட்டரில் வைரலாகி அதிக லைக்குகளைக் குவித்து வருகிறது. 




வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேச்சு


முன்னதாக வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் விஜய்யைப் பற்றி சிலாகித்து விவேக் பேசிய பேச்சு விஜய் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் அரங்கம் அதிரும் கைத்தட்டல்களையும் பெற்றது.


”சில விஷயம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். இருட்டை ஒரு தீக்குச்சி எப்படி வெல்கிறதோ அப்படி விஜய் எனும் காந்தம் இப்படிப்பட்ட மாபெரும் கூட்டத்தை கவர்ந்து வைத்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஒருநாளும் மொபைல் உபயோகித்து பார்த்தது இல்லை. தாமதமாக வந்தது இல்லை, கேரவனுக்கும் சென்றதில்லை. விஜய்யிடம் ஒரு சின்ன குறைகூட சொல்ல முடியாது. 


விஜய் ஷூட்டிங்கின்போது அரசனாகவோ தளபதியாகவோ இல்லாமல் ஒரு மனிதனாக நடந்து கொண்டார். விஜய் போன்ற ஒரு எண்டெர்டெய்னரை இந்தியா பார்த்ததில்லை” எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.