தனக்கு ஏற்ற மாதிரியான செண்டிமெண்ட் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் சசி குமார். ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்ற நோக்கில் கோலிவுட் பக்கத்தில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் , நடிப்பிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இறுதியாக இவர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் , ஓடிடியில் வெளியான எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் என பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சசி குமார்.அந்த வகையில் தற்போது ட்ரெண்ட்ஸ் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அயோத்யா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். நேற்று இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் (நவம்பர் 22 ) துவங்கவுள்ளது. இதற்காக மதுரை மற்றும் ராமேஸ்வரம் மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். 45 நாட்கள் அந்த பகுதிகளில் படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் மூர்த்தி. படம் தனிமனிதன் தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்திக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ளார் இயக்குநர்.
அயோத்தி என்ற பெயர் ஒரு சர்ச்சைக்குறிய பெயராக இருப்பதால் அது குறித்து செய்தியாளர்கள் இயக்குநர் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு படத்தின் கதைக்களத்திற்கு பொருத்தமாக இருக்கும் என அப்பெயரை சூட்டியதாகவும், மேலும் விவரங்களை தற்போது கூற முடியாது என சஸ்பென்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மூர்த்தி. படத்தில் யஷ்பால் ஷர்மா, போஸ் வெங்கட் , குக் வி்த் கோமாளி புகழ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.படத்தில் நடிப்பது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்த , நடிகர் புகழ் “எனது அடுத்த படம் தொடங்கிவிட்டது மக்களே! லவ் யூ இது என் உயிர் ரசிகர்களுக்கு சமர்ப்பணம் “ என தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை கலைஞரான புகழ் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அஜித்துடன் வலிமை, அருண் விஜயுடன் யானை, சந்தானத்துடன் சபாபதி , சிவகார்த்திகேயனுடன் டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் Trident Arts தயாரிக்கும் மற்றொரு படமான என்ன சொல்ல போகிறாய் படத்தில் குக் வித் கோமாளி அஸ்வினுடன் நடித்து வருகிறார் புகழ். சிறந்த நகைச்சுவை நடிகரான புகழுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவது ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.