பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் பாவனா பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதில் இருந்து கிரிகெட் துறைக்குள் நுழைந்தது ஏன் என்பது குறித்து பேசியிருக்கிறார்.


அதில் அவர் பேசும் போது, “ ஒரு சவாலுக்காகத்தான் அந்தத்துறை சார்ந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்க சம்மதித்தேன். ஆங்கரிங்கின் அடுத்தக்கட்டம் என்ன என்று கேட்டால் அனைவரும் படம் நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அந்த எண்ணம் எனக்கு இல்லை. இன்னொன்று எனக்கும் நடிப்பதற்கு தேவையான திறமை இல்லை என்ற எண்ணமும் இருக்கிறது.


 






எனக்கு நல்ல பேச்சுத்திறன் இருக்கிறது என்பது தெரியும். இன்னொன்று நான் நிறைய படிப்பேன். நிறைய உழைப்பேன். அதில் எப்போதும் எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. அப்போதுதான் நான் யோசித்தேன். ஆக்ங்கரிங்கின் அடுத்தப்படி சினிமாவாக இல்லாமல்,ஏன் இன்னொரு துறைக்குள் நுழைந்து சாதிப்பதாக இருக்க கூடாது என்று நினைத்தேன். இது கடினமாக இருக்கப்போகிறது என்பது நன்றாகத்தெரியும். இருப்பினும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று யோசித்தேன். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் என்னை கூப்பிடும் போதும் கூட என்னை ஏன் கூப்பிட்டீர்கள் என்றுதான் கேட்டேன்.” என்று பேசினார்.


சென்னையை சேர்ந்த தொகுப்பாளினி பாவனா ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிக்கு சேர்ந்தார்.


 






அதன் பின்னர் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் இணைந்த பாவனா  ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’,   ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’‘ஜோடி நம்பர் 1’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  தமிழில் இணைந்த அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். பாடகியாகவும் வலம் வரும் பாவனா, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நீதில் ரமேஷ் திருமணம் செய்து அங்கு வசித்து வருகிறார்.