பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து நடிகர் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தில் நடிகர் விஜய் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இயக்குநர் அட்லி கோலிவுட் தாண்டி பாலிவுட் சென்று ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், முன்னதாக அவரது திருமண விழாவில் ஷாருக்கான் அட்லியுடன் பங்கேற்றார். இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
நட்புக்காக...
இந்நிலையில் நடிகர் விஜய்யின் ஆஸ்தான இயக்குநரான அட்லி, ஜவான் படத்தில் கேமியோ பாத்திரத்தில் நடிக்க விஜய்யை கேட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. தெறி, மெர்சல் படங்களின் மூலம் விஜய்யும் அட்லியும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ள நிலையில், விஜய்யும் இதற்கு சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஜவான் படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
பாலிவுட்டில் ஏற்கெனவே நடித்துள்ள விஜய்!
ஏற்கெனவே பிரபுதேவா, அக்ஷய் குமாரை வைத்து இயக்கிய சிறுத்தை பட ரீமேக்கான 'ரௌடி ரத்தோர்' படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் தலைகாட்டி தன் ரசிகர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது.
’பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் ’வாரிசு’ படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநரான வம்சியின் இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. தமன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.