தி கோட் 


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து வருகின்றன.வெங்கட் பிரபு , யுவன் ஷங்கர் ராஜா , பல்வேறு நட்சத்திரங்கள் என இப்படத்தின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. பிகில் படம் மொத்தம் 180 கோடி தயாரிக்கப்பட்டது. தற்போது தி கோட் படத்தின் மொத்த பட்ஜெட் குறித்த தகவல்களை தயாரிபபளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்துள்ளார்


தி கோட் படத்தின் பட்ஜெட்


தி கோட் படத்தின் மொத்த பட்ஜெட் ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து 400 கோடி என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இந்த 400 கோடியில் நடிகர் விஜயின் சம்பளம் மட்டுமே 200 கோடி. அதாவது பிகில் படத்தின் மொத்த பட்ஜெட்டையே விஜய் இப்படத்தில் சம்பளமாக பெற்றுள்ளார். இது குறித்து பேசிய அர்ச்சனா கல்பாத்தி “கடந்த ஐந்து ஆண்டுகளிலேயே விஜய் சாரின் மார்கெட் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் கேரளா, தெலங்கானா , இந்தி மற்றும் வெளிநாடுகளில் என எல்லா இடங்களிலும் விஜயின் மார்கெட் பெரிதாகியுள்ளது. விஜய் மாதிரியான ஒரு நடிகர் இருக்கும் போது நாங்கள் 400 கோடி ரூபாய் முதலீடு செய்து அதில் லாபமும் பார்க்க முடிகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.


தி கோட் ப்ரீ பிஸ்னஸ்


தி கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. தமிழ் , தெலுங்கு , கன்னட மொழிகளின் ஓடிடி விற்பனை 125 கோடிக்கும் இந்தி மொழி ஓடிடி உரிமம் மட்டுமே 25 கோடிக்கு மொத்தம் 150 கோடிக்கு படம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து படத்தின் சேட்டலைட் உரிமத்தை  ஜி நெட்வர்க் 93 கோடிகளுக்கு பெற்றுள்ளது. இது தவிர்த்து படத்தின் ஆடியோ ரைட்ஸ் டி சீரிஸ் நிறுவனம் 26 கோடிக்கு பெற்றுள்ளது. 






வெளியாவதற்கு முன்பே தி கோட் படம் மொத்தம் 260 கோடி வரை முதலீட்டு பணத்தை திருப்பி எடுத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் உலகளவில் 6000 திரையரங்குகளுக்கும் மேலாக படம் வெளியாக இருக்கிறது . இப்படத்தின் முதல் நாள் வசூல் பல்வேறு சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் 148 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை தி கோட் படம் கடக்கும் என எதிர்பார்க்கலாம்