பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மெட்ரோ ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என பார்க்கும் இடமெங்கும் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே படம் வெளியாகி ஒருபுறம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், மறுபுறம் விஜய் ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்தான் இப்படத்தின் உயிர் நாடி என்றும், அவர் இல்லையென்றால் படமே ஒன்றுமில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொங்கலையொட்டி இப்படம் வெளியானதால், பல மக்கள் தங்கள் குடும்பத்துடன் விடுமுறை நாட்களை கழிக்க சென்றுவருகின்றனர்.இதனால் ஜனவரி 17 ஆம் தேதியான நேற்றுவரை பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறியுள்ளது. தெலுங்கை தவிர பிற மொழிகளில் வாரிசு படம் 11 ஆம் தேதி வெளியான நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி வாரசுடு வெளியானது. வழக்கமாக தெலுங்கு திரையுலக ஹீரோக்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு விஜய்க்கும் கொடுக்கப்பட்டது தமிழ் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வாரிசு படம் வெளியாகி சில நாட்கள் ஆன நிலையில், அப்படம் இதுவரை வசூலித்த பணத்தை குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், 5 நாட்களில் உலகமெங்கும் 150 கோடி ரூபாயை வாரிசு வசூலித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விஜய்யை ஆட்டநாயகன் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
வாரிசு படக்குழுவினர்
வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.