லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய், சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரிலீசுக்கு முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த லியோ படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் இதுவரை ரூ.540 கோடி வசூலை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது. அதேசமயம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகப்படியான பாஸ் கோரிக்கை, பாதுகாப்பு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய்யின் பேச்சை கேட்க முடியாமல் ரசிகர்கள் சோகமடைந்தனர். இப்படியான நிலையில் லியோ படத்தின் வெற்றி கொண்டாட்ட விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் தவிர்த்து படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மேடையேறி மைக்கைப் பிடித்த விஜய், வழக்கம்போல ‘என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா..நண்பிகள்’ என சொல்லி ரசிகர்கள் மனம் குளிர வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், உண்மையை சொல்லணும்ன்னா என்னை நீங்க தான் உங்க நெஞ்சில குடி வச்சிருக்கீங்க. நான் குடியிருக்கும் கோயில் தான் நீங்க. இது கேக்குறதுக்கு சினிமா வசனம் மாதிரி இருக்கலாம். ஆனால் நீங்க காட்டுற அன்புக்கு என் உடம்பை செருப்பா தைச்சு உங்களுக்கு போட்ட கூட பத்தாது. நீங்க எல்லாரும் பிளடி ஸ்வீட் என கூறினார்.
மேலும், ‘குறிக்கோளை பெரிதாக வைத்து வாழ்க்கையில் வாழ வேண்டும் என்பதை அழகான குட்டிக்கதை மூலம் விஜய் தெரிவித்தார். அப்துல் கலாம் Small aim is crime எனவும், பெரிதினும் பெரிது கேள் என பாரதியார் கூறியிருப்பதாகவும் அவர் மேற்கோள் காட்டி பேச அரங்கமே அதிர்ந்தது. அதேசமயம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபடுவதையும் விஜய் கண்டித்தார். நமக்கு நிறைய வேலைகள் இருக்கு. அதனால் சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் விஜய் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து அவரிடம், “2026 ஆம் ஆண்டு” என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘என்ன உலகக்கோப்பையா?’ என நக்கலாக பதில் சொன்ன விஜய், ‘கப்பு முக்கியம் பிகிலு’ என நச்சென்று அடுத்த வரியை சொல்ல ரசிகர்களின் ஆரவாரம் அடங்க ரொம்ப நேரமானது. இதனிடையே லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசியது இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.