நடிகர் கார்த்தி, இயக்குனர் எம்.ராஜேஷ் கூட்டணியில் உருவான ஆல் இன் ஆல் அழகுராஜா படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஆல் இன் ஆல் அழகுராஜா படம்
சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் ஆகிய நகைச்சுவை படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் இயக்குனர் ராஜேஷ். இவரது மூன்றாவது படமாக ஆல் இன் ஆல் அழகுராஜா உருவானது. இந்தப் படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சந்தானம்,சரண்யா, ராதிகா ஆப்தே, ஆடுகளம் நரேன், கோட்டா சீனிவாசராவ், சந்தான பாரதி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். தமன் இசை அமைத்த ஆல் இன் ஆல் அழகுராஜா படம் 2013ஆம் ஆண்டு தீபாவளி விருந்தாக வெளியாகி இருந்தது.
படத்தின் கதை
தனது முந்தைய இரண்டு படங்களின் சாயலையே இப்படத்திலும் ராஜேஷ் பயன்படுத்தியிருந்தார். அதன்படி தென்காசியில் கேபிள் டிவி நடத்தி பெரிய அளவில் வர விரும்பும் நபராக கார்த்தி உள்ளார். அவரது கேபிள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபராக சந்தானம் வருகிறார். இருவரும் ஒரு திருமண நிகழ்விற்கு சென்றிருக்கும்போது அங்கு இசை கச்சேரி நடத்தும் காஜல் அகர்வாலை சந்திக்கின்றனர். ஆனால் காஜலின் பாடல் திறமை கார்த்தியை எரிச்சல் ஊட்டுகிறது. இதனால் இருவருக்கும் மோதல் உருவாகி பின்பு அது காதலாக மாறுகிறது.
ஒரு கட்டத்தில் தனது காதலை அப்பா பிரபுவிடம் தெரிவிக்க சென்ற இடத்தில் கார்த்திக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அப்படியே பிளாஷ்பேக் காட்சிகளும் செல்கிறது. அதில் நாசரிடம் சந்தானத்தின் (அப்பா சந்தானம்) சிபாரிசின் பேரில் வேலைக்கு சேர்கிறார் பிரபு. அப்படியே நாசரின் மகள் ராதிகா ஆப்தேவுடன் காதலும் ஏற்படுகிறது. பிரபுவின் உழைப்பை கண்டு அவரை தான் நடத்தி வரும் தியேட்டரில் பொறுப்பான வேலைக்கு அமர்த்தி பாராட்டுகிறார் நாசர்.
இந்த செயல் சந்தானத்தை பொறாமையில் தள்ளும் நிலையில் அவர் செய்யும் ஒரு சதியால் பிரபு நாசர் குடும்பத்தால் அவமானப்படுத்தப்படுகிறார். இதன் காரணமாக பிரபு காதலும் பிரிகிறது. இரண்டு குடும்பங்களுக்கும் மிகப்பெரிய அளவில் பிளவு இருக்கும் நிலையில், பிரிந்த குடும்பங்கள் இணைந்ததா? காஜல் அகர்வால் கார்த்தி காதல் கைகூடியதா என்பதே ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் கதை ஆகும்.
கூடுதல் தகவல்கள்
- ஆல் இன் ஆல் அழகுராஜா படம் ரிலீசான சமயத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஆனால் இன்றைக்கும் டிவியில் டிஆர்பி ரேட்டிங் எகிறுவதோடு ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தும் என்பதே உண்மை
- இந்த படத்தில் அழகுராஜா, முத்துக்கிருஷ்ணன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்தார். அதேபோல் கல்யாணம் மற்றும் காலி என இரட்டை வேடத்தில் சந்தனம் எடுத்திருந்தார். இதில் முத்துக்கிருஷ்ணன் கேரக்டரில் நிகழ்கால கதையில் பிரபுவும், பிளாஷ்பேக்கில் கார்த்தியும் நடித்தார்.
- இப்படத்தில் சந்தானம் கரீனா சோப்ரா என்ற பெண் கேரக்டரில் வலம் வருவார். அவர் சொக்கநாதனாக வரும் கோட்டா சீனிவாச ராவிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகள் வேற லெவலாக இருக்கும்.
- அதேபோல் தில்லானா திவ்யநாதனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு சாட்டையடித்து யாசகம் பெறும் நபராக வருவார். அவரிடம் காஜல் அகர்வால் பரதம் கற்றுக்கொள்ள செல்லும் காட்சிகள் காமெடியின் உச்சக்கட்டம்
- மேலும் தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியது. வாய்ப்பு கிடைத்தால் ரிலாக்ஸான நேரத்தில் இந்த படத்தை பாருங்கள்...!