நடிகர் விஜய் சேதுபதி இசைக்கற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவில் சின்னசின்ன கதாபாத்திரங்களில் நடித்த விஜய்சேதுபதி, சீனுராமசாமி இயக்கிய  ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ‘பீட்சா’  ‘சூதுகவ்வும்’ ‘ காதலும் கடந்தும் போகும்’  ‘சேதுபதி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த விஜய்சேதுபதிக்கு ‘விக்ரம் வேதா’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து  ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என பரிசார்த்த முயற்சிகளில் ஈடுபட்ட விஜய்சேதுபதிக்கு அந்தப்படங்கள் பெரிய வெற்றியாக அமையவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக அந்தப்படங்களில் அவருக்கு பெயர் கிடைத்தது. 




அதனைத்தொடர்ந்து வில்லனாக களமிறங்கிய விஜய்சேதுபதி, விஜய் நடித்த  ‘மாஸ்டர்’ மற்றும்  கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ மட்டுமல்லாது பிறமொழி திரைப்படங்களிலும் வில்லனாக நடித்தார். விஜய்சேதுபதியின் வில்லன் அவதாரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும்  ‘ஜவான்’ படத்திலும் 25 கோடி சம்பளத்திற்கு கமிட் ஆகியிருக்கிறார். இவைத்தவிர வெற்றிமாறனின் விடுதலை படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.




வழக்கமான கதாநாயகன்கள் பின்பற்றும் பாணியை பின்பற்றாமல், கதை முக்கியவத்தின் அடிப்படையிலும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்திலும் அடிப்படையிலும், கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய்சேதுபதி, தற்போது மற்றொரு அவதாராமாக இசை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டி கற்றுக்கொண்டிருக்கிறாராம். அவருக்கு  ‘சேதுபதி’ ‘கூட்டத்தில் ஒருவன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா இசை சொல்லிக்கொடுத்து வருகிறாராம். 


இது குறித்து வெளியாகியிருக்கும் தகவலில், “ நடிகர் விஜய்சேதுபதி அடுத்து வரும் படங்கள் ஏதாவது ஒன்றிற்கு  இசையமைக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், இசை கற்றுக்கொள்வதற்காக நேரம் ஒதுக்கி அவர் இசை கற்று வருகிறார்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.