விஜய் சேதுபதி மற்றும் விக்ராந்த் மாசே நடித்த 'மும்பைக்கர்' என்ற த்ரில்லர் படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் 5ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. 


சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள மும்பைக்கர் படத்தில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ஹிருது ஹாரூண், ரன்வீர் ஷோரே, தன்யா மானிக்தலா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மும்பையின் பரபரப்பான தெருக்களுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களில் வாழ்க்கையை கூறும் இந்த படம், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் ரீமேக் படமாக எடுக்கப்பட்டுள்ளது. 


நகரத்தை சேர்ந்த வாழ்க்கை பற்றி கதாபாத்திரங்களில் பார்வைக்கு ஏற்ப சொல்லும் விதமாக அமைக்கப்பட்டிருந்த அழுத்தமான கதைக்களம் பார்வையாளர்களை அற்புதமான பயணத்திற்கு அழைத்து செல்லும் விதமாகவும், மிகவும் விறுவிறுப்பான மும்பை நகரின் அறியப்படாத  பக்களங்களை காட்டும் படமாகவும் மும்பைகர் உள்ளது. இப்படிப்பட்ட வித்யாசமான கதைக்களம் கொண்ட படத்தை ஜோதி தேஷ்பாண்டே மற்றும் ரியா ஷிபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக உருவாக்கப்பட்டுள்ள 'மும்பைக்கர்' த்ரில்லர் திரைப்படம் நவ.5-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட உள்ளது. 


முன்னதாக படம் குறித்து நடிகர் விக்ராந்த் மாசே பேசும்போது, “விஜய் சேதுபதி சாருடன் படத்தில் இணைந்து நடித்ததில் முழு மகிழ்ச்சி அடைகிறேன். நான் சந்தோஷ் சிவன் சார் படங்கள் பார்த்து வளர்ந்தவன். நான் எப்போதும் அவருடைய பணிகளை, படங்களைப் பாராட்டியிருக்கிறேன். இப்போது அவருடைய இயக்கத்தில் நான் நடித்திருப்பது என்றென்றும் போற்றும் அனுபவமாக இருந்தது. எங்கள் சூப்பர் ஜோடியை தமிழக மக்கள் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


இதேபோல் மும்பைகர் படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இந்திய நடிகர்களுக்கு இது ஒரு உற்சாகமான நேரமாக இருக்கிறது. பல்வேறு மொழிப் படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் எங்களுக்கு வருகின்றன. வெப் சீரிஸில் நான் நடித்ததற்காக மக்களின் அன்பு, பாராட்டுகளை பெற்றுள்ளேன். இந்த திரைப்படம் எனது முதல் இந்தி திரைப்பட அறிமுகமாக அமைந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியாவதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கருத்துகளை நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் அதை விரும்புவார்கள் மற்றும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


படத்தின் இயக்குநர்  சந்தோஷ் சிவன் பேசும்போது, “மீண்டும் ஒரு ஹிந்தி படத்தை இயக்கியது ஒரு பெரிய உணர்வாக அமைந்துள்ளது. மும்பைகர் திரைப்படம் என்பது ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் மூலம் நகரத்தின் கண்ணோட்டத்தைத் தரும் படமாகும். மும்பை மாநகருக்கு என்று அதன் சொந்த தனித்துவம் உள்ளது. அதை இந்தப் படத்தின் மூலம் இணைக்க முயற்சித்தேன். திறமையான நடிகர்களுடன் ஒரே படத்தில் இணைந்தது ஆச்சரியமாக இருந்தது” என்றார்.