சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து பட்டித்தொட்டி எங்கும் வெற்றிபெற்ற திரைப்படம் 96. பிரேம்குமார் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பள்ளிவாழ்க்கையில் தொடங்கி ஒரு வித அழகான உணர்வோடு அப்படம் முடிவடையும். பள்ளி காதலியை ஒரு ரியூனியனில் மீண்டும் ஹீரோ சந்திப்பதும் அவர்களுக்கு இடையேயான நினைவு பகிர்தலுமே படம். கதைக்களம் எந்த அளவுக்கு படத்திற்கு பாசிட்டிவோ அதே அளவுக்கு படத்தின் இசையும் பேசப்பட்டது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் அனைத்துவிதமான ரசிகர்களையும் கவர்ந்தது.




இந்தப்படம் தமிழில் மாபெரும் வெற்றிப்பெற்றதை அடுத்து தெலுங்கிலும் ரீமேக் ஆனது. த்ரிஷாவின் கதாபாத்திரத்தில்  சமந்தா நடித்திருந்தார். அதேபோல் கன்னடத்திலும் 96 ரீமேக் செய்யப்பட்டு அங்குள்ள ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் 96 படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் அஜய் கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். 96 ரீமேக் உரிமையை அவரே பெற்றுள்ளார். இந்நிலையில் படத்தில் நடிப்பவர்கள் குறித்தும் படக்குழு குறித்தும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக இணையத்தில் பதிவிட்டுள்ள அவர், 


96 என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. என்றென்றும் அப்படியே இருக்கும். நம் மொழி பார்வையாளர்களுடன் ராம் மற்றும் ஜானுவின் கதையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருந்தது. இது விரைவில் பரந்த பார்வையாளர்களை சென்றடையும். அதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது அஜய் கபூர் ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்



இது குறித்து பதிவிட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி, '96' எனக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகராக, பார்வையாளர்களைக் கவர்ந்த கதைகளைச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அது பரந்த பார்வையாளர்களை அடையும்போது மேலும்  மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.






இந்தியில் ரீமேக் ஆகவுள்ள 96 படத்துக்கு அப்படத்தின் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய மக்களை அதிகம் கவர்ந்த ராமும், ஜானும் இப்போது இந்தியையும் ஆக்கிரமிப்பார்கள் என பதிவிட்டு வருகின்றனர்.