விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் ஃபார்சி (Farzi)
மனோஜ் பாஜ்பாயி, ப்ரியாமணி நடிப்பில் அமேசான் ப்ரைமில் வெளிவந்து பெரும் ஹிட் அடித்த சீரிஸ் ’த ஃபேமிலி மேன்’. இந்தி மொழியில் உருவான இந்த சீரிஸ் இரண்டு சீசன்களாக எடுக்கப்பட்ட நிலையில் சமந்தாவின் நடிப்பில் வெளியான இரண்டாவது சீசனும் பெரும் ஹிட் அடித்தது.
வெப் சீரிஸ் முதன்முறையாக விஜய் சேதுபதி!
இந்நிலையில், மெகா ஹிட் அடித்த ஃபேமிலி மேன் சீரிஸின் இயக்குநர்கள் ராஜ் & டிகே அடுத்ததாக இயக்கும் ’ஃபார்சி’ வெப் சீரிஸின் ட்ரெயலர் நேற்று (ஜன. 13) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கோலிவுட்டின் மக்கள் செல்வனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் மூலம் கத்ரினா கைஃப் உடன் பாலிவுட் சினிமாவில் கால் பதிக்கும் நிலையில், தற்போது ஃபார்சி சீரிஸின் மூலம் வெப் சீரிஸ் உலகிலும் கால் பதிக்கிறார்.
இந்நிலையில், மல்ட்டி ஸ்டாரர் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி, ஷாஹித் உடன் இணைந்தது நடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
’வெற்றியில் நம்பிக்கை இல்லை’
தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்தது ”பாதுகாப்பற்ற உணர்வைத் தந்ததா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ”நான் அதை அப்படி பார்க்கவில்லை. நான் பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.
அவை பெரும்பாலும் படமும் மல்ட்டி ஸ்டாரர் தான். நான் ஷாஹித் கதாபாத்திரத்தை தான் இன்னும் மதிக்கிறேன். இங்கு யாரும் யாருடனும் போட்டி போட வருவதில்லை. நாங்கள் அனைவரும் ஒத்துழைப்போடு இணைந்தே செயல்படுகிறோம்.
எனக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை, இந்த விளையாட்டை ரசிக்கிறேன். நாங்கள் நிறைய பகிர்ந்து கொள்கிறோம், கற்கிறோம். நான் என்னைப் பற்றி குறைவாக உணரவில்லை.
’3ஆவது படத்தில் நெகட்டிவ் ரோல்’
என்னுடைய மூன்றாவது படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தேன். இந்த பாத்திரத்தை செய்வதில் உறுதியாக இருக்கிறாயா என என் இயக்குநர் என்னிடம் கேட்டார். ஆனால் நான் அதை செய்தேன்.
நான் திறமையான நடிகர்களுடன் மட்டுமே பணியாற்ற விரும்புகிறேன். எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு வர முடியாது. வாழ்க்கை என்பது பந்தை கேட்ச் பிடித்து எறிவது போன்றது. அதுதான் கற்றுக் கொள்ள ஒரே வழி.
திறமையான நடிகரும் அற்புதமான நபருமான ஷாஹித் கபூருடன் டைனமிக் இரட்டையர்களான ராஜ் மற்றும் டி.கே ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஃபார்ஸியைப் போல மனதைக் கவரும் ஒரு படைப்பை உருவாக்குவது நம்பமுடியாததாக இருந்தது" என்றும் கூறியுள்ளார்.
8 எபிசோடுகளைக் கொண்டு க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ஃபார்சி தொடர், பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.
தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் வெளியாகும் நிலையில், விஜய் சேதுபதி தன் சொந்தக் குரலிலேயே இந்தியில் பேசி நடித்துள்ளது அவரது கோலிவுட் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.