வெகு அரிதான சமயங்களில் பெரிய அளவிலான ஆடம்பரம் இல்லாமல் குறைவான பொருட்செலவில் , கதாநாயக பிம்பமில்லாமல் ஒரு பயணத்தின்போது சந்தித்த பரிச்சயம் இல்லாத ஒரு நபரிடம் கேட்டு வந்த கதையைப்போல் ஒரு படத்தை நாம் பார்ப்போம்.


திரையரங்கத்தில் பார்ப்பதைப் போல் கைத்தட்டவோ, விசிலடிக்கவோ, ரத்தம் கொத்திகும் ஆக்‌ஷன் காட்சிகள் எதுவுமே இல்லாமல் அந்தப் படம் இருக்கலாம். ஆனால் எத்தனை ஆண்டுகள் கழித்து நினைவுபடுத்தினாலும் அந்த கதையின் ஏதாவது ஒரு அம்சம் மறையாமல் நம் மனதில் ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருக்கும். அப்படியான ஒர் படத்தை தமிழ் சினிமாவில் யாராவது நடித்திருக்கிறார்களா என்று கேட்டால் சில நடிகர்கள் மட்டுமே வரிசையில் வந்து நிற்பார்கள்.


அந்த வரிசையில் விஜய் சேதுபதி தனது ஆரஞ்சு மிட்டாய் படத்தை கொண்டு நிற்பார்.




ஆரஞ்சு மிட்டாய்


கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ஆரஞ்சு மிட்டாய். விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், ஆறுபாலா , ஆஸ்ரிதா  நடிப்பில் வெளியாகி விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பில் உருவான படம் ஆரஞ்சு மிட்டாய். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். பிஜு விஸ்வநாத் இயக்கினார்.


கதை


சத்யா  (ரமேஷ் திலக்) மற்றும் ஆறுமுகம் (ஆறுமுகம்) இருவரும் அவசர ஆம்புளன்ஸ் சேவையில் வேலை செய்கிறார்கள். தனது காதலியின் தந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் குழப்பத்தில் தவிக்கிறார் சத்யா. இப்படியான நிலையில் கைலாசம் ( விஜய் சேதுபதி) என்கிற முதியவருக்கு மாரடைப்பு ஏற்புள்ளதாக சத்யாவிற்கு அழைப்பு வருகிறது. உடனே அவருக்கு உதவ செல்கிறார்கள் சத்யா மற்றும் ஆறுமுகம். ஆனால்.. போன இடத்தில் இவர்கள் சந்திப்பது வயது முதிர்ந்த மாரடைப்பின் எந்த அறிகுறியும் தென்படாத ஒருவரைத்தான்.


அவரை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் பயணத்தின்போது சத்யா மற்றும் கைலாசத்திற்கு இடையில் நடக்கும் வாழ்க்கை அனுபவ பரிமாற்றமே இந்தப் படத்தின் கதை.  




சில நேரங்களில்  நமக்கு நெருக்கமான மனிதர்களின் அருமையை புரிந்துகொள்ள, அவர்கள் நம்மைவிட்டு தூரமாக செல்ல வேண்டியதாக இருக்கிறது. அப்படியாக தனது அப்பா மீதான தனது அன்பை கைலாசத்தின் வழியாக கண்டடைகிறார் சத்யா. அதே நேரத்தில் தன்னை தனியாக விட்டுச் சென்றுவிட்ட தனது மகனை, சத்யாவிடம் கண்டடைகிறார் கைலாசம்.


மிக நிதானமாக செல்லும் இந்தப் படத்தில் ஆறுபாலாவின் நகைச்சுவை இந்தப் படத்தின் மிகப்பெரிய பக்கபலம்.


எல்லாம் சரி.. படம் நெடுகிலும் ஒரு டப்பாவில் ஆரஞ்சு மிட்டாய்களை எடுத்து சாப்பிட்டபடியே இருக்கிறார் விஜய் சேதுபதி அது ஏன்..?


சலிப்பான இந்த வாழ்க்கையில் கொஞ்சம் நேரம் இனிமையையும் தித்திப்பையும் உணருவதற்காக இருக்கலாம். அப்படித்தானே? இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது ஆரஞ்சு மிட்டாய்