தமிழ்த் திரை உலகில் துணை நடிகராக பணிபுரிந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான மற்றும் பரிச்சயமான நடிப்பால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் என்றாலே வருடத்திற்கு ஒன்று இரண்டு படங்கள் தான் ரிலீஸ் ஆகும் என்ற போக்கை மாற்றி அமைத்தவரும் இவர்தான். வருடத்திற்கு மூன்று நான்கு என படங்களை கொடுத்தவர். இந்நிலையில் தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.






விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் என இந்த ஆண்டு இவர் நடிப்பில் மூன்று படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. தற்போது இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 'மேரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு கதாநாயகியாக முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இதற்குமுன் பாலிவுட்டில் 'அந்தாதுன்' என்ற வெற்றி படத்தை இயக்கியுள்ளார்.




மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் தற்போது இந்த திரைப்படம் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 






முன்னதாகவே படம் ஓடிடியில் வெளியாகிறது என்று வதந்திகள் எழுந்த நிலையில் படக்குழுவினர் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு வெளியாக இருந்த மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.






இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் எஸ் ராமகிருஷ்ணன் கதையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்'.பல ஆண்டுகளுக்கு முன்னதாக சூட்டிங் தொடங்கி வெளிவராமல் இருந்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா, வடிவுக்கரசி ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.