மகாராஜா


விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவான மகாராஜா படம் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான  நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுராக் கஷ்யப் , அபிராமி , நட்டி , சிங்கம் புலி , முனிஷ்காந்த் , மம்தா மோகந்தாஸ்  உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 2024 ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி வசூல் ரீதியாக ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று மகாராஜா. தமிழில் மட்டுமில்லாமல் இந்தி , தெலுங்கு என அனைத்து தரப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. இந்தியா தொடர்ந்து கடந்த  செப்டம்பர் 29 ஆம் தேதி மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாகி இருக்கிறது


சீனாவில் மகாராஜா


தமிழ் படங்களுக்கு ஜப்பான் மற்றும் சீன ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெரியளவிலான மதிப்பு இருந்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலுக்குப் பின் இந்த சூழல் முழுவதுமாக மாறியது. சீனாவில் வெளியாகும் இந்திய திரைப்படங்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்தது. தற்போது நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் அங்கு வெளியாகியுள்ளது. சுமார் 40 ஆயிரம் திரைகளில் இப்படம் வெளியானது. அதிகளவிலான திரையரங்குகளில் வெளியானாலும் படத்திற்கு முதல் சில நாட்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் நாளுக்கு நாள் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. 


தங்கல் பட வசூலை முறியடிக்குமா மகாராஜா


சீனாவில் மகாராஜா திரைப்படம் இதுவரை ரூ 23 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாக மகாராஜா படம் சாதனைப் படைத்துள்ளது. உலகளவில் மகாராஜா இதுவரை ரூ 129 கோடி வரை வசூலித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் படம் 150 கோடி வசூல் இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் இப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு முன்னதாக ஆமீர் கான் நடித்த தங்கல் திரைப்படம் உலகளவில் பல நாடுகளில் வெளியாகி 2000 கோடி வசூல் குவித்தது. இந்த வசூல் சாதனையை மகாராஜா திரைப்படம் முறியடிக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது