மகாராஜா


விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள படம் மகாராஜா (Maharaja). குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. மம்தா மோகன் தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், நட்டி, முனீஷ்காந்த், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். போஸ்டர், ட்ரெய்லர் என எதிர்ப்பார்ப்பை எகிற வைத்த மகாராஜா படக்குழு, அதனை 100% பூர்த்தி செய்துள்ளது. திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் படத்தை பாராட்டி தள்ளுகின்றனர். 


மகாராஜா படத்தின் கதை


சலூன் கடை வைத்திருக்கும் மகாராஜா தனது மகளோடு வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் தனது மகளைக் காப்பாற்றிய ஒரு குப்பை தொட்டியை தனது வீட்டில் கடவுள் அளவுக்கு பத்திரமாக பார்த்து பார்த்து வருகிறார். மறுபக்கம் வீடு புகுந்து கொள்ளையடித்து கொலைகளை செய்யும் கொடூரமான வில்லன் செல்வம் கதாபாத்திரத்தில்  வருகிறார் அனுராக் கஷ்யப். தனது வீட்டில் இருந்த குப்பைத் தொட்டியை காணவில்லை என்று மகாராஜா காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார். ஒரு குப்பைத் தொட்டிக்காக மகாராஜா ஏன் இவ்வளவு அலப்பறை செய்கிறார். உண்மையில் காணாமல் போனது குப்பைத் தொட்டிதானா, மகாராஜாவுக்கும் செல்வத்திற்கு என்ன தொடர்பு, காணாமல் போன குப்பைத் தொட்டிக்குப் பின் இருக்கும் மர்மம் என்ன என்று மேலோட்டமான ஒரு கதையை வைத்து ஆழத்தில் மிகவும் உணர்ச்சிவசமான ஒரு கதையை சொல்கிற மகராஜா படம்.


மிக எளிமையான ஒரு கதையை திரைக்கதையை வைத்து சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கும் நிதிலன் ஸ்வாமிநாதனுக்கு பாராட்டுக்கள் ஒருபக்கம் குவிந்து வருகின்றன. விஜய் சேதுபதியின் நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வதாக அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிகின்றன. ஒரு பக்கம் மகாராஜா படத்திற்கு பாராட்டுக்கள் வந்தாலும் இன்னொரு படம் இந்தப் படம் பேச எடுத்துக் கொண்ட கதைக்களம் பல்வேறு கேள்விகளை விமர்சகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. இந்த மாதிரி சென்சிட்டிவான ஒரு கதையை சுவாரஸ்யத்திற்காக மட்டும் முதிர்ச்சியற்ற முறையில் கையாளப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விமர்சனங்கள் எழுந்தாலும் வெகுஜனத்தின் மத்தியில் மகாராஜா படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் விளைவாக படத்தின் வசூலும் அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வருகிறது.


மகாராஜா 3 நாள் வசூல்


மகாராஜா படத்திற்கு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மகராஜா முதல் நாளில் இந்தியளவில் ரூ 4.7 கோடி வசூலித்ததாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டாவது நாளில் ரூ. 7.75 கோடியும் மூன்றாவது நாளில் ரூ.9 கோடியும் படம் வசூலித்துள்ளதாக இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் முன்று நாட்களில் மகாராஜா படம் ரூ 21.45 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்திற்குள்ளாக மகாராஜா படம் 50 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.