ஓடிடியில் வெற்றியை பெற்றிருக்கும் மாமனிதன் திரைப்படம் திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரி குவித்து வருகிறது. 


இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் 'மாமனிதன்'. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப்படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர். ஆனால் சீனு ராமசாமிக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை முளைத்த நிலையில், நீண்ட நாட்களாக இந்தப்படம் கிடப்பிலேயே இருந்தது. 


 


 






அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மாமனிதன் படத்தை வாங்கி வெளியிட்டார். அப்படி இப்படியுமாக இந்தப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இந்தக்கூட்டணியில் வெளியான ‘தர்மதுரை’ படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில்,இந்தப்படத்தின் மீது அதே மாதிரியான எதிர்பார்ப்போடு ரசிகர்கள் வந்தனர். 






ஓடிடியில் மெகா ஹிட்


படம் யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்த போதினும், கதையின் ப்ளாட் அதரபழையதாக இருந்த காரணத்தால்  படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. விளைவு படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள். அதனால் தியேட்டரில் படுதோல்வியை சந்தித்து ரேஸில் இருந்து வெளியேறியது மாமனிதன். அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூனின் ஆஹா ஓடிடி தளம் மாமனிதன் படத்தை வாங்கி தனது தளத்தில் வெளியிட்டது. தியேட்டரில் காலை வாரிய  ‘மாமனிதன்’ ஓடிடியில் சக்கை போடு போட்டது. தொடர் வரவேற்பால் குஷியான ஆஹா குழு  படத்தின் ஓடிடி வெற்றியை விழா எடுத்துக்கொண்டாடியது.


தொடர்ந்து பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட  ‘மாமனிதன்’ அங்கும் பல விருதுகளை வென்று வருகிறது. அதன்படி  டோக்கியோ பட விருதுகள் விழாவில், சிறந்த ஆசியப்பட பிரிவில் கோல்டன் விருதை வென்ற மாமனிதன், தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த சாதனைக்கான விருது, விமர்சகர்கள் தேர்வு விருது என சேர்த்து மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் திரைப்படம் வென்றது.


விழாக்களில் விருதுகள்


அதைத்தொடர்ந்து கேங்டாக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த கதையம்சம் என 3 பிரிவுகளிலும் விருதுகளை மாமனிதன் திரைப்படம் வென்றது. அந்த வரிசையில் தற்போது மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட வெர்ஜின் ஸ்பிரிங் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. அதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அது திரையரங்கில் எடுக்கப்படும் படங்கள், ஒன்று கொண்டாட்ட மனநிலையை தரவேண்டும் அல்லது மிக நேர்த்தியான திரைக்கதைகளை உடைய படங்களாக இருக்க வேண்டும்.