விஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் நடிப்பில் வெளியாகும் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
தனது நடிப்புத் திறமையால் கோலிவுட் தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி ரசிகர்களையும், அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
எப்போதும் பரிச்சார்த்த முயற்சிகளுக்குத் தயங்காத விஜய் சேதுபதி, ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்ததைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முன்னதாக நேரடி தெலுங்கு படங்களான ’சாய் ரா நரசிம்ம ரெட்டி’, ’உப்பென்னா’, மலையாளத்தில் ’மார்கோனி மத்தாய்’ ஆகிய படங்களில் நடித்து அவரது பிற மொழி ரசிகர்களை மகிழ்வித்தார்.
தொடர்ந்து பான் இந்தியா படமாக உருவான விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான கத்ரினா கைஃபுடன் ’மெர்ரி கிரிஸ்துமஸ்’ (Merry Christmas) படம் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி தருகிறார்.
'அந்தாதுன்' படம் மூலம் கவனமீர்த்த இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேரி கிறிஸ்துமஸ் படத்தின் ஷூட்டிங் முன்னதாக முடிவடைந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாத நிலையில் ரிலீஸ் வரும் 2023ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் நாள் அன்று படத்தை வெளியிட முடியாத நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு கிறிஸ்துமஸ் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
”நாங்கள் கிறிஸ்துமஸ் நாளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டோம், ஆனால் அதில் தற்போது சிறிய திருப்பம். விரைவில் உங்களை படத்துடன் சந்திக்கிறோம்” எனக் குறிப்பிட்டு கத்ரினா கைஃப் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இரண்டு ஒய்ன் டம்ளர்களுடன் சியர்ஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.