தி பேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ஈழ தமிழர்களை இழிவு படுத்தியிருப்பதாக கூறி தமிழ் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் கொந்தளித்தன.ஆனால் தமிழர்களின் உணர்வுகளை நாங்கள் புண்படுத்தவில்லை. அவர்களின் உணர்வுகளை ஆழமாகத்தான் காட்டியுள்ளோம் என படக்குழுவினர் மறுத்தனர். இந்நிலையில் பேமிலி மேன் சீரிஸின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே தங்களது ட்விட்டர் பக்கத்தில் நேற்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தனர், அதன் மூலம் அவர்கள் இயக்க இருக்கும் அடுத்த தொடரில் மக்கள் செல்வன் நடிப்பது உறுதியானது. அப்போது வெளியான புகைப்படம் தீயாக பரவியது. இந்த புதிய சீரிஸில் விஜய் சேதுபதி ஷாகித் கபூருடன் பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார்.





இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் ராஜ் அண்ட் டிகேவின் இந்த புதிய கூட்டணிக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் கண்டன குரல்களை எழுப்பி  வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக் என்பவர் ட்விட்டரில் விஜய் சேதுபதியை மோசமாக சாடியுள்ளார். அதில் “ தி பேமிலி மேன் 2 தொடர் மூலம் புலிகளைக் கொச்சைப்படுத்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களைக் காயப்படுத்திய அயோக்கியர்களோடு கொஞ்சிக்குலவ எப்டி முடிகிறது விஜய் சேதுபதி ? வெட்கமின்றி 'மக்கள் செல்வன்' என சுய தம்பட்டம் அடிக்க எப்படி முடிகிறது?கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி! “ என குறிப்பிட்டுள்ளார்.







முன்னதாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார் ஆனால் தமிழ் அமைப்புகளின் தொடர் கண்டனத்தால் அந்த படத்திலிருந்து விலகிவிட்டார்.அதன் பிறகு அந்த படத்தையே படக்குழுவினர் கைவிட்டர். இந்நிலையில் ஃபேமிலி மேன் தொடரின் அடுத்த பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியானது. ஆனால் அதனை விஜய் சேதுபதியே மறுத்தார். இந்நிலையில் ஃபேமிலி மேன் இயக்குநர்களின் அடுத்த படைப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி. இது ஒரு புறம் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. ஆனாலும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வருகின்றனர்.