பிரபுதேவா நடிக்கும் வுல்ப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


பிரபுதேவா, அஞ்சுகுரியன் மற்றும் லட்சுமி ராய் நடிக்கும் புதிய படம் வுல்ப். வினோ வெங்கடேஷ் இயக்கும் இந்த படத்தை சந்தோஷ் புரோடெக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. பிரபுதேவானின் 60 வது படமான இதில், வசிஷ்டா என் சிம்ஹா, அனுசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் உள்ளிட்டோ நடித்துள்ளனர். 


600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை மையமாக கொண்டு த்ரில்லர் படமாக வுல்ப் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் செடிபே என்ற பெண் தெய்வத்தை வணங்கி வந்தவர்களின் சந்ததியினருக்கும், எழுத்தாளராக வரும் பிரபுதேவாவுக்கும் உள்ள தொடர்பையும், அவர் எழுதும் ஒரு கதையால் வரும் பிரச்சனையையும் கூறுவதே வுல்ப் படத்தின் கதையாக கூறப்படுகிறது. 


த்ரில்லர் படம் என்பதால் ஓநாய், நரிகள் கூட்டத்தை ஹீரோவான பிரபு தேவா எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பயத்துடன் காட்ட படக்குழு முயற்சித்துள்ளது. இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அஞ்சுகுரியன் நடித்துள்ளார். புஷ்பா படத்தில் வில்லியாக இருந்த அனுசுயா இந்த படத்தில் டிரஸ்டியாகவும், லட்சுமிராய் மனோதத்துவ நிபுணராகவும் நடித்துள்ளனர். படத்துக்கு அம்ரேஷ் இசை அமைத்துள்ளார். 




முன்னதாக படத்தின் தலைப்பைப் பற்றி பேசிய இயக்குநர் வினோ, "படத்தின் ஹீரோ மற்றும் வில்லன் இருவருக்குமே ஓநாயின் குணாதிசயங்கள் இருக்கும். இந்த இருவரின் மோதலில் எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பது தான் கதை" என கூறியுள்ளார். இந்த நிலையில் வுல்ப் படத்தில் பிரபுதேவாவுக்காக ‘பார்’ என்ற பாடலை விஜய் சேதுபதி பாடியுள்ளார். பிரபுதேவாவுக்காக விஜய் சேதுபதி பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி வுல்ப் படத்தின் டீசர் வெளியாகும் என்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், அடுத்தக்கட்டமாக போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. 


ஹிப்னாடிசம், தெய்வ நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றை கொண்டு எடுக்கப்பட்டுள்ள த்ரில்லர் படமான வுல்ப் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.