இன்று பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ரீ-யூனியன் நிகழ்வுகளுக்கு வழி வகுத்த ”96” படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


ஒளிப்பதிவாளராக இருந்து சி.பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  96 படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்,ஆதித்யா பாஸ்கர், வர்ஷா பொல்லம்மா, கௌரி கிஷன், ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்த நிலையில் படத்தின் அனைத்து பாடல்களையும் கார்த்திக் நேத்தா எழுதியிருந்தார். 


கொண்டாட மறந்த நினைவுகள் 


நம்மில் பலரும் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை தாண்டி தான் இன்றைக்கு நல்ல நிலைமைக்கு வந்திருப்போம். வந்துக் கொண்டும் இருக்கிறோம். அப்படியான வாழ்க்கையை நாம் திரும்பி பார்த்தால் அதில் ஏதோ ஒரு பருவத்தில் சொல்லப்படாத காதல் என்பது இருக்கும். அந்தக் காதலுக்கு நாமே கற்பனையாக உருவமும், வாழ்க்கையையும் கொடுத்திருப்போம். போட்டோ, பாடல்கள், படங்கள், பெயர்கள் என எதைக் கண்டாலும் அந்த காதலின் நியாபகம் தான் நம்மை ஆட்கொள்ளும். 


காலம் கடந்து வேலை, திருமண வாழ்க்கை என சென்றுக் கொண்டிருக்கும் நாம் எங்கேயாவது நம்முடன் படித்த நண்பர்களை கண்டால் நேரம் காலம் பார்க்காலம் கதை பேசிவிட்டு தான் வருவோம். தொழில் நுட்பங்கள் மாறிவிட்ட இந்த உலகில் இத்தகைய உரையாடல்களுக்கு நேரம் இல்லை என்பதே என்பதே உண்மை. இப்படியான நிலையில் இவை எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி நம்மை கடந்த காலத்திற்கு கைப்பிடித்து இழுத்துச் சென்றது “96” படம். 


படத்தின் கதை 


ஒரு பள்ளியில் 1996 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மீண்டும் ஒன்றுக் கூடி ரீ-யூனியன் நடத்த முடிவு செய்கிறார்கள். இதற்கென தனி வாட்ஸ்அப் குரூப் தொடங்கப்பட்டு உள்ளூர் முதல் வெளிநாடு வரை இருக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. திருமணமாகி பல நிலைகளை அடைந்த விட்ட மாணவ, மாணவிகள் அனைவரும் குடும்பத்துடன் வருகிறார்கள். இந்த மாணவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். அவரும் அந்நிகழ்ச்சிக்கு வர, பள்ளி வயதில் காதலிக்க தொடங்கி எதிர்பாராத பிரிவால் கலைந்து போன காதலின் தேவதையான த்ரிஷாவும் வேறு ஒருவருடன் திருமணமான நிலையில் வருகை தருகிறார்.


வந்த இடத்தில் காதல் உணர்வுகள் துளிர்விட, கிடைத்த நேரத்தில் தங்கள் நினைவுகளை அசைப்போட்டு, அந்த நொடியை எப்படியாக கழிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை. 


உருகிப்போன இளம் வயதினர்


உண்மையில் 96 படம் இன்றளவும் பலருக்கும் பேவரைட் ஆக உள்ளது. அதற்கு காரணம் சொல்லப்பட்டாத காதலும், சொல்லியும் நிறைவேறாமல் போன காதலும் தான். எங்காவது ஒரு இடத்தில் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை கழிக்கும் பலரை நம்மை சுற்றி பார்த்திருப்போம். திடீரென அவர்களை சந்திக்கும் சூழல் அமைந்தால் நம்மையும் அறியாமல் அந்த காதலும், அதன் உணர்வுகளும் மேலோங்கி நிற்கும் அல்லவா. அதை கண் முன்னே கொண்டு வந்து சேர்த்தது “96” படம். 


ராம்..ஜானு


ராம் ஆக விஜய் சேதுபதி, ஜானு (ஜானகி தேவி) ஆக த்ரிஷா நடித்திருந்தனர். இதேபோல் இவர்களின் சிறுவயது கேரக்டரில் ஆதித்யா பாஸ்கரும், கௌரி கிஷனும் அறிமுகமாகியிருந்தனர். பள்ளி மற்றும் நிகழ்கால காதல் காட்சிகள் வேறுபடுத்தி அழகாக தெளிவான திரைக்கதையுடன் காட்டப்பட்டிருந்தது. இந்த படத்துக்கு மேலும் பலம் கொடுக்கும் வகையில் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அமைந்திருந்தது. ஜெஸ்ஸிக்கு பிறகு த்ரிஷாவை எல்லோரும் கொண்டாட இந்த 96 படம் மிக முக்கிய காரணமாக இருந்தது. “காதலே காதலே.. தனிப்பெரும் துணையே.. கூட வா கூட வா.. போதும் போதும்..” அந்த பாடலின் ஒற்றை வரியே காலத்துக்கும் காதல் வாழ காரணமாக இருக்கும் என்பது உண்மை...!