54 ஆவது இந்தியத் திரைப்பட விழா
மத்திய அரசின் நிதியுதவியுடன் வருடந்தோறும் நடத்தப் படும் நிகழ்வு சர்வதேச இந்தியத் திரைப்பட விழா. கடந்த 53 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழா 54 ஆவது முறையாக கோவாவில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு மொழிப்படங்கள், ஆவணப்படங்கள் , குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. மேலும் உலகம் முழுவதில் இருந்து திரைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவாதிக்க இருக்கிறார்கள்.
திரையிடப்படும் தமிழ் படங்கள்
தமிழ் சார்பாக இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை ஆகிய இரண்டு படங்கள் இந்தியன் பனோரமா பிரிவின்கீழ் திரையிடப்பட இருக்கின்றன. மேலும் இந்த ஆண்டின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி நடித்த மற்றொரு படமும் இந்த விழாவில் திரையிடப் பட்டு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
காந்தி பேசுகிறார்
விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி, சித்தார்த் ஜாதம் உள்ளிட்டவர்கள் நடித்து கிஷோர் பாண்டுரங் பெலெகர் இயக்கியிருக்கும் படம் காந்தி டாக்ஸ் (காந்தி பேசுகிறார்). ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒரு வசனம் கூட இல்லாமல் முழுக்க முழுக்க மெளனப் படமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. ரூபாய் தாளில் இருக்கும் காந்திக்கும் காந்தி என்கிற ஒருவரின் கொள்கைக்கும் இடையில் இருக்கும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஒரு படமாக பேச முயற்சித்திருப்பதாக இந்தப் படத்தில் இயக்குநர் கூறியுள்ளார்.
இப்படம் குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி ”சமூக நீதி எதார்த்தத்தைவிட வேறானது. இந்தப் படத்தில் இருக்கும் கதாநாயகன் முதலில் பணத்தில் இருக்கும் காந்தியை மதிக்கிறான். பின் காந்தி என்கிற் ஒரு மனிதனை கண்டடைகிறான்“ என்று பேசினார்.
வசனங்கள் இல்லாத ஒரு படத்தில் நடிப்பது சவாலாக இருந்ததா என்கிற பத்திரிகையாளரின் கேள்விக்கு விஜய் சேதுபதி “என்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதற்கு வசனங்கள் எல்லா நேரமும் அவசியமாக இருந்தது இல்லை. அப்படி இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. மக்களின் ஆதரவைப் பெற கலை எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இந்த மாதிரியான ஒரு துறையில் வெற்றித் தோல்விகளுக்கான வாய்ப்புகள் அதிகம். எல்லா நேரமும் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்வது இந்தத் தொழிலின் ஒரு பகுதி’ என்று அவர் கூறியுள்ளார்.