‛‛தென்மேற்கு பருவக்காற்று படம் வெளியான போது, சென்னை உதயம் காம்ப்ளக்ஸில் படத்திற்கு ஆள் வருகிறார்களா என்பதை பார்க்க நானும், படத்தின் நாயகன் விஜய் சேதுபதியும் காத்திருப்போம்; அப்போது பெரும்பாலானோர் கமல் சாரின் மன்மத அம்பு திரைப்படத்திற்கு தான் செல்வார்கள்; இன்று அதே விஜய் சேதுபதி, கமலுக்கு வில்லனாக நடித்திருக்கிறார்’’ என்று, இயக்குனர் சீனுராமசாமி பேட்டியில் கூறியிருந்தார்.


உண்மையில், விஜய் சேதுபதியின் வளர்ச்சி அபரிவிதமானதே. இயல்பான நடிப்பால், பெருவாரியான ரசிகர் கூட்டத்தை தக்க வைத்த விஜய் சேதுபதி, தான் ஹீரோ என்கிற பந்தா இல்லாமல் பயணிப்பது தான், அவரது ப்ளஸ் பாய்ண்ட். புதிதாய் அறிமுகம் ஆகும் நடிகர்கள் கூட தயங்கும், வில்லன் கதாபாத்திரத்தை துணிந்து, விரும்பி ஏற்பதும் விஜய் சேதுபதி ஒருவர் மட்டுமே. ஒரே நேரத்தில் வில்லன், ஹீரோ என இரு காளையாக தன் சினிமா பயணம் எனும் மாட்டு வண்டியை இழுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் மாற்றத்திற்கான ஹீரோ என்றால் அது மிகையாகாது. 


பேட்ட




ரஜினி படத்தில் நடிக்க எத்தனையோ நடிகர்கள் தவமிருக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் வில்லனாக நடித்து அசர வைத்தவர் விஜய் சேதுபதி. அந்த படத்தில் வில்லன் என்பதை கடந்து, இரண்டாம் பாதியை சுவாரஸ்யமாக மாற்றியதில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு பெரிய பங்கு உண்டு. அந்த வகையில் குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்த முதல் ஹீரோ விஜய் சேதுபதி.


மாஸ்டர்




தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தைப் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். அவர், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இதே கால கட்டத்தில் தான், விஜய்யும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவர்களும் ஒரு வித போட்டியாளர்கள் தான். ஆனால் , அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக களமிறங்கினார் விஜய் சேதுபதி. விஜய்-விஜய் சேதுபதி ஜோடி அந்த படத்தில் தனி முத்திரை பதித்தது என்று கூறலாம் . அந்த அளவிற்கு தனது பங்களிப்பை விஜய் சேதுபதி தந்திருப்பார். அந்த வகையில், ரஜினி, விஜய் என்கிற இரு தலைமுறைக்கும் வில்லனானார் விஜய்  சேதுபதி.


விக்ரம்




ரஜினி-விஜய் முடிச்சாச்சு... கமலுக்கு வில்லனாவாரா? என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில், கமலுக்கு வில்லனானார் விஜய் சேதுபதி. இது யாரும் எதிர்பாராத திருப்பம். மாஸ்டரில் இணைந்த அறிமுகம், லோகேஷ் கனகராஜ் அதிலும் இயக்குனர் என்பதால், அந்த வாய்ப்பை அவர் எளிதில் பெற்றிருக்கலாம். எப்படி பெற்றாலும், அந்த கதாபாத்திரத்தை வேறு ஒருவரை வைத்து எதிர்பார்க்கவே முடியாத அளவிற்கு வெளுத்து வாங்கிவிட்டார் விஜய் சேதுபதி. இதன் மூலம், தனது தேர்வை அவர் நிரூபித்தார். அந்த வகையில், கடந்த தலைமுறையின் கனவு நாயகர்களான ரஜினி-கமலுக்கு வில்லனாக நடித்து முடித்தார் விஜய் சேதுபதி!


அஜித் மட்டும் தான் பாக்கி!




ரஜினி-கமல் என்று பிரிக்கும் போது, தற்போது அஜித்-விஜய் என்று தான் பேசப்படும். விஜய்க்கு வில்லனாக நடித்த பிறகு, அஜித்தை மட்டும் மிச்சம் வைப்பாரா என்ன? அதற்கான வாய்ப்பும் கூடிய விரைவில் வரலாம். அவ்வாறு வந்தால், சூப்பர் ஸ்டார்களின் வில்லன் என்கிற பட்டத்தை பெறும் ஒரே ஹீரோ விஜய் சேதுபதி தான். எந்த ஒரு நடிகரும் சேர்க்காத பேராக அது இருக்கும். தனக்கென ஒரு பெரிய மார்க்கெட் இருக்கும் போதே, கதைக்கான பாத்திரத்தை தேர்வு செய்து, அது எதுவாக இருந்தாலும் துணிந்து நடிக்கும் விஜய் சேதுபதி, உண்மையில் பந்தா காட்டும் ஹீரோக்களுக்கு வில்லன் தான்!