நடிகை நயன்தாரா (Nayanthara) - இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) தம்பதியினர் தங்கள் குழந்தைகள் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளனர். 


தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளில் ஒருவராக அறியப்படுவர்கள் நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியினர். இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றினர். அப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய நிலையில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.


கிட்டதட்ட 7 ஆண்டுகள் காதல் பயணத்துக்குப் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில்  உள்ள தனியார் விடுதியில் திருமணம் செய்துக் கொண்டனர். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நெருங்கிய திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் திருமண வீடியோ ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகி முதலில் ஒரு குட்டி வீடியோ மட்டும் வெளியாகி ட்ரெண்டானது. 


இப்படியான நிலையில்  கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்தனர்.  வாடகைத்தாய் மூலமாக இக்குழந்தைகள் பிறந்த நிலையில், கடும் சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் சட்டத்தின்படியே இருவரும் நடந்துக் கொண்டதாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதற்கிடையில்  அவ்வப்போது குழந்தைகளின் முகத்தை முழுவதுமாக காட்டாமல் புகைப்படங்களை விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தனர். 


தங்களது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும் உலக் தெய்விக் N சிவன் என்று பெயரிடப்பட்டதாக விருது விழா ஒன்றில் நயன்தாரா தெரிவித்திருந்தார். குழந்தைகளுடன் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடும் இந்த ஜோடி முகத்தை சரியாக காட்டாததால் ரசிகர்கள் ஃபீல் செய்தனர். இந்நிலையில் முதல்முறையாக விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உயிர் மற்றும் உலக் ஆகியவர்களின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில்,


என் முகம் கொண்ட .. என் உயிர் 
என் குணம் கொண்ட.. என் உலக்
இந்த வரிகளையும் நம்முடைய படங்களையும் ஒன்றாக இடுகையிட நீண்ட நேரம் காத்திருந்தேன் என் அன்பு மகன்களே.. என் அன்பு மகன்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
அப்பாவும் அம்மாவும் வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு உங்கள் இருவரையும் நேசிக்கிறோம்.
நீங்கள் எங்கள் வாழ்க்கையில் வந்து அதை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றியதற்கு நன்றி.
நீங்கள் அனைத்து நேர்மறையான எண்ணங்களையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வந்துள்ளீர்கள். 
இந்த ஓராண்டு வாழ்நாள் முழுவதும் ரசிக்க வேண்டிய தருணங்களால் நிரப்பப்பட்டுள்ளது. லவ் யூ மகன்களே..! என தெரிவிக்கப்பட்டுள்ளது.