வம்சி இயக்கும் வாரிசு படத்தில் மொபைல் ஆப் டிசைனராக நடிகர் விஜய் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தன் பெயரையே கொண்ட ’விஜய் ராஜேந்திரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்குப் பிறகு  இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக நடிகர் விஜய் ரா ஏஜெண்டாக பீஸ்ட் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து ரா உளவாளியின் பணிகள் குறித்து இணையத்தில் பெரும் விவாதமே கிளம்பியது.




இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய் ஆப் டிசைனராக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் செய்தி அதிகாரப் பூர்வமாக வெளியான நாள் முதல் விஜய் ரசிகர்கள் #தளபதி66 என்ற ஹேஷ்டேகில் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் உற்சாகமாகக் களமாடி வந்தனர்.


 






இந்நிலையில், முன்னதாக நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டிலான ’வாரிசு’ அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து “ தி பாஸ் ரிட்டர்ன்ஸ்” எனும் டேக் லைனுடன் இப்படத்தின் போஸ்டர் அட்டகாசமாக வெளியானது.


இப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முன்னதாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளன.


இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. தமன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்க ரிலீஸாக இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.