தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமாக திகழ்பவர் விஜய் மில்டன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப்சீரிஸ் கோலி சோடா ரைசிங். இந்த வெப்சிரீஸில் பிரபல நடிகர்களான சேரன், ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இமான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கோலி சோடா ரைசிங் ரிலீஸ் எப்போது?
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ள இந்த கோலி சோடா ரைசிங் வெப் சீரிஸ் வரும் செப்டம்பர் 13ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விஜய் மில்டன் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான கோலி சோடா மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் பெற்றது. அதன்பின்னர், அதன் இரண்டாம் பாகத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், கோலி சோடா கதைக்களத்துடன் வெப்சீரிஸில் விஜய் மில்டன் இந்த முறை களமிறங்கியுள்ளார். இதன் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
சேரன், ஷாம், புகழ்:
புத்திசாலி இளைஞர்களாக வளர்ந்துள்ள சிறுவர்கள், இம்முறை வாடகை கடை அமைக்காமல், சொந்தமாக ஒரு கடை அமைக்க தீர்மானிக்கின்றனர். இந்த தொடரில் நடிகரும் இயக்குநருமான சேரன் முன்னாள் குற்றவாளியாகவும், நடிகர் ஷாம் ஒரு மோசமான ரவுடியாக நடிக்கிறார். விஜய் டிவி பிரபலம் நடிகர் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி இந்த வெப்சீரிசை தயாரித்துள்ளார். இந்த வெப்சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருங்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L படத்தொகுப்பு செய்துள்ளார்.
7 மொழிகளில் ரிலீஸ்:
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி என 7 மொழிகளில் இந்த வெப்சீரிஸ் வெளியாகவுள்ளது. விஜய் மில்டன் கடைசியாக இயக்கிய மழை பிடிக்காத மனிதன் பெரியளவு வெற்றியைப் பெறாத சூழலில், இந்த வெப்சீரிஸ் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க முடியும் என்று விஜய் மில்டன் நம்புகின்றார்.