உலக பட்டினி தினத்தை(World Hunger Day 2023) முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம்(Vijay Makkal Iyakkam) சார்பில் இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


விஜய் மக்கள் இயக்கம்:


’தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' திட்டம் மூலம் வரும் 28 ஆம் தேதி காலை 11 மணியில் இருந்து இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளது. மே-28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா,கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இலவச மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


இது தொடர்பான விஜய மக்கள் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம்:


உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று "உலக பட்டினி தினம்" அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.


"தளபதி" அவர்களின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்" திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "பட்டினி தினத்தை" முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.


இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" இந்த நலப்பணி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


பொதுக்கூட்டம் கூட்டத்திற்கு ஏற்பாடு

 

இந்த நிலையில் சென்னையில் அடுத்த மாதம் பொதுக்கூட்டம் ஒன்றை விஜய் தலைமையில் நடத்த விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னதாக , மாவட்டம் தோறும் இருக்கும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் , 12 ஆம் மற்றும் 10ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக , அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் உதவி தொகைகளை  விஜய் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இனி எந்த வித அரசியல் இயக்கத்திலும் செயல்படக்கூடாது, என விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.‌ சென்னையில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டம் விஜய் பிறந்தநாள் ஆன ஜூன் 22 ஆம் தேதி நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

விஜயும் அரசியல் ஆசையும்

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் அரசியலில் களம் காண்பது, தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை , தற்பொழுது சூழலில் அரசியல் ஆசை மிக்க நடிகர் யார் என்று கேட்டால், அது நடிகர் ' விஜய் 'தான். குறிப்பாக நடிகர் விஜய் நடத்தி வரும் "விஜய் மக்கள் இயக்கம்"  ( Vijay Makkal Iyakkam ) அதற்கான முன் எடுப்பாகவே கருதப்படுகிறது. நற்பணி மன்றம் மட்டும் நடத்தி வந்த விஜய், படிப்படியாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் மட்டுமில்லாமல் அதற்கு துணை அமைப்புகளையும் உருவாக்கி உள்ளார். இளைஞரணி, தொண்டரணி, மகளிர் அணி வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை விஜய் கட்டமைத்து வருகிறார்.