'நான் தான் சகலகலா வல்லவன்' என்ற பாடலின் வரிகளுக்கேற்ப  திரைத்துறையில் ஒரு ஜாம்பவானாக 60 ஆண்டு காலமாக பயணித்து வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடன ஆசிரியர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என அனைத்து பிரிவுகளிலும் தனது திறமையை நிரூபித்தவர். சினிமா மீது அவருக்கு இருந்த அளவுக்கு கடந்த காதல் தான் அவரை சர்வதேச அளவில் ஒளிர செய்கிறது.


அடுத்த தலைமுறையினராலும் அவரின் திறமை வியந்து பார்க்கும் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தி வருபவர் கமல்ஹாசன். 1960ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் தொடங்கிய அவரின் பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் அனைத்து மொழிகளிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியவர். 


 



சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் 2023:


உலகநாயகன் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி இந்திய அரசின் மிகவும் உயரிய விருதுகளான டாக்டர் பட்டம், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், தேசிய விருதுகள் மற்றும் பிரான்ஸ் அரசு வழங்கும் மிகவும் உயரிய விருதான செவாலியர் விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் ஆகச்சிறந்த திரைத்துறை கலைஞர்களுக்கு சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


23வது IIFA விருதுகள் வழங்கும் விழா 27 மே 2023, சனிக்கிழமையன்று அபுதாபி யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ‘இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது’ நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்க IIFA ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வெளியானதில் இருந்து கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 


உற்சாகத்தை வெளிப்படுத்திய கமல் :


இந்தாண்டிற்கான IIFA விழாவில் அவர் கலந்து கொள்வது குறித்து கமல்ஹாசன் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார், “பல IIFA விருதுகள் வழங்கும் விழாவில் நான் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் பெருமையாகவும் நன்றியுடனும் இருக்கிறேன். இந்திய சினிமாவை உலக அளவில் விளம்பரப்படுத்த அவர்கள் பெரும் பணி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார். 27ம் தேதி அபுதாபியில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியை அபிஷேக் பச்சன் மற்றும் விக்கி கௌஷல் தொகுத்து வழங்க உள்ளனர்.


 



மீண்டும் மணிரத்னம் - கமல்ஹாசன் காம்போ :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற 'விக்ரம்' படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.