விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது சில கட்சிகள் பிரச்சனை செய்வதால், அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் சட்ட உதவிகள் செய்யவும் விஜய் மக்கள் இயக்க வக்கீல் அணி கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், போஸ்ட் புரெடெக்ஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. படப்பிடிப்பை முடித்து கொண்ட விஜய் ஓய்வுக்காக குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்கு பிறகு கடந்த சில மாதங்களாக அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம் தோறும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
அதை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். விஜய் அறிவுறுத்தலின் பேரில் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் நடத்தி வருகிறது. தொடர்ந்து விஜய் அரசியலில் தீவிரம் காட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வக்கீல் அணி கூட்டம் வரும் 5ம் தேதி சென்னை பனையூரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வக்கீல் அணியினருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து 6ம் தேதி கேரள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் மாவட்டங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். விஜய் உத்தரவின் பேரில் இந்த கூட்டம் நடைபெறுவதாக குறிப்பிட்ட புஸ்ஸி ஆனந்த், பல ஊர்களில் மாற்று கட்சியினரால் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைகள் வருவதாகவும், அதை எதிர்கொள்ளவும், சட்ட உதவிகள் வழங்கவும் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் போட்டியிடுவதால் தேர்தல் ஆணையம் குறித்தும், அதன் விதிமுறைகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்க, சனிக்கிழமை நடைபெற உள்ள விஜய் மக்கள் இயக்க வக்கீல் அணி கூட்டம் உதவியாக இருக்கும் என்றார்.