தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி உலகெங்கும் ரிலீசாக உள்ளது.


தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது. அந்த வகையில், குட் பேட் அக்லி படத்தின் கர்நாடக மாநில விநியோகஸ்த உரிமையை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


அஜித் பட உரிமையை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பு நிறுவனம்:


கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது கன்னட திரையுலகின் பிரபல விநியோகஸ்த நிறுவனம் ஆகும். கடந்த சில வருடங்களாக தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இந்த நிறுவனம்தான் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் படத்தை தயாரித்து வருகிறது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் மூலம் தமிழில் முதன்முறையாக படத்தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. 






அஜித்குமாரின் படத்தை விஜய்யின் கடைசி பட தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியிருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த கர்நாடகம் முழுவதும் குட் பேட் அக்லியை கேவிஎன் நிறுவனமே வெளியிடுகிறது. அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக குட் பேட் அக்லி படம் உருவாகியிருப்பதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் அஜித் கேங்ஸ்டராக நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் தயாராகியுள்ளது. 


குட் பேட் அக்லி:


இந்த கேவிஎன் நிறுவனம் யஷ்ஷின் டாக்சி்க் உள்ளிட்ட பல பெரிய நடிகர்களின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம்  உருவாகி வருகிறது.


குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் சுனில், பிரசன்னா, அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.