ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்தை வெளியிட இருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் மேலும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக இருப்பதால் படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச் வினோத் இயக்கியுள்ள விஜயின் கடைசி படமான ஜனநாயகன் வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்த பராசக்தி படத்தில் ரிலீஸ் தேதியும் ஜனவரி 10 ஆம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் ஜனநாயகன் படம் வெளியிடுவதிலும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது
பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை சிதாரா என்டர்டெயின்மெண்ட் வெளியிட இருந்தது. தற்போது படத்தை வெளியிவுவதில் இருந்து இந்த நிறுவனம் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 10 ஆம் தேதி மகர சங்கராந்தியை முன்னிட்டு மற்ற தெலுங்கு படங்கள் வெளியாக இருப்பதால் ஜனநாயகன் படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் படக்குழு சவால் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் தழுவலாக உருவாகி உள்ள ஜனநாயகன் படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இந்தி ரிலீஸ்
அதேபோல் இந்தியிலும் படத்திற்கு இதுவரை படக்குழு பெரியளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை. இதனால் இந்தியிலும் இப்படம் மிக குறைவான திரையரங்குகளிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் முந்தைய படங்களான லியோ மற்றும் தி கோட் ஆகிய இரு படங்களுக்கும் இந்தியில் பெரியளவில் ப்ரோமோஷன் செய்யாததால் மிக குறைவான வசூல் ஈட்டியது.