நடிகர் விஜய்யை பார்க்கும் போது தனக்கு என்ன தோன்றும் என நடிகர் ஆமீர்கான் தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமீர்கான். கரீனா கபூர், ஷாரூக்கான், நாக சைதன்யா. மோனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சிங் சத்தா”. இந்த படத்தை ஆமீர்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படமானது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதே தேதியில் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள ரக்ஷா பந்தன் படமும் வெளியாகவுள்ளதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் படத்தால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தை புரொமோட் செய்ய ஆமீர்கான் நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினுடன் கலந்து கொண்டார்.
ஒரு ஃபேன் பாய் தருணமாக இப்படத்தை வெளியிடுகிறேன். இந்தி திணிப்பை எதிர்ப்பது தான் திமுகவின் கொள்கை தானே தவிர இந்தி படங்களை எதிர்ப்பது அல்ல எனவும் அப்போது உதயநிதி கூறினார்.
இதனைத் தொடர்ந்து இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஆமீர்கானிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பற்றி கேள்வி எழுப்புகிறார். அதற்கு விஜய் ஒரு அற்புதமான நடிகர். அவரை பார்க்கும் போது என்னுடைய சகோதரன் போன்ற உணர்வு ஏற்படும். நம்முடைய குடும்பத்தில் ஒருவராக உள்ளார் எனவும் ஆமீர்கான் பதிலளித்துள்ளார். மேலும் இதே போன்ற உணர்வு தான் நடிகர் ரஜினியை பார்க்கும் போது ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்