குட் பேட் அக்லி 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து ஜி. வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

முதல் நாள் வசூல் 

முழுக்க முழுக்க மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படம் முழுவதும் அஜித்தின் பல படங்களின் ரெஃபரன்ஸ் இடம்பெறுகிறது. சண்டைக் காட்சிகளில் இடம்பெறும் இளையராஜா பாடல்கள் திரையரங்கில் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு கூட்டிச் செல்கின்றன. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வந்தாலும் மற்ற தரப்பு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே தெரிவித்து வருகிறார்கள். 

வசூலைப் பொறுத்தவரை அஜித்தின் கரியரில் மிகப்பெரிய வசூல் சாதனையை எட்டியுள்ளது இப்படம். முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ 28.5  கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் அபாச வார்த்தைகள் 

குட் பேட் அக்லி படத்தில் ஒரு சில இடங்களில் அஜித் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை சுட்டிகாட்டி விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதேபோல் லியோ படத்தில் விஜய் ஒரு வார்த்தை பேசியதற்காக அவரை எல்லாரும் விமர்சித்தார்கள். நடிகர் என்ரால் பொறுப்பு வேண்டும் இதனால் குழந்தைகள் கெட்டுப்போவார்கள் என்று சொன்னார்கள் .

ஆனால் இதையே அஜித் செய்தால் அவரை எதிர்த்து ஒருத்தரும் கேள்வி எழுப்பவில்லை. பதிலாக கொண்டாடவே செய்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்