லியோ திரைப்படத்தின் முதல் பாடலான, நான் ரெடிதான் பாடலில் விஜய் சிகரெட் பிடிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு சமூக ஆர்வலர்களிடம் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துவந்தன. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பொது நிகழ்ச்சிகளில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை பகிர்ந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தின் முதல் பாடலான நான் ரெடி பாடல் கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஒருபக்கம் ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடி வர மறுபக்கம் இந்தப் பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. பாடல் முழுவது நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் மாணவர்களுக்கு ஆலோசனை கூறும் விஜய் இப்படி படத்தில் நடிக்கலாமா? அது இளம் தலைமுறையினரை தவறான முறையில் வழிநடத்தலாகாதா? என்கிற கேள்விகளை எழுப்பினர். இதனால் விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர். மற்ற நடிகர்களும் தான் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கிறார்கள் ஆனால் விஜயை மட்டும் குற்றம் சாட்டுவது அவர் மீது இருக்கும் வெறுப்பில் காரணத்தினால் என்று அவர்கள் தரப்பு வாதமாக இருந்தது.


கையில் சிகரெட்டுடன் ரஜினி






இந்த சர்ச்சை கிளம்பி ஒரு மாத காலம ஆகியும் இன்னும் முடிவடையாத விவாதப் பொருளாக இருந்து வருகிறது. தற்போது தங்களது வாதத்தை வலுப்படுத்தும் வகையிலான ஒரு சம்பவம் விஜய் ரசிகர்களின் கையில் மாட்டியிருக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தான் அந்த துருப்புச் சீட்டு. தீவிர புகைப்பிடிக்கும் பழக்க ரஜினிகாந்துக்கு இருந்தது என்றும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு பல ஆண்டுகள் ஆகின்றன என்பது நமக்குத் தெரிந்த செய்தி. தான் புகைப்பிடித்து வந்த காலத்தில்  நேர்காணல்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் கையில் சிகரெட்டுடன் அமர்ந்து ரஜினி பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அதனைச் சுட்டிக்காட்டி படத்தில் செய்தாலே தவறு என்றால் இதை என்ன சொல்வீர்கள் என்கிற வகையில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.


மேலும் ரஜினி புகைப்பிடித்துக் கொண்டிருக்க அவருக்கு அருகில் விஜய் நின்றுகொண்டிருக்கும் ஒரு புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பது சரியா தவறா என்கிற நீண்ட நாள் விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.