நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம் படுதோல்வியடைந்துள்ளதாக தியேட்டர் அதிபர்கள் புலம்பி வருகின்றனர். 


பயங்கரமான எதிர்பார்ப்போடு வெளியான படம்:


தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் விருமன் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களாக வெற்றிநடை போட்டு வரும் சமயத்தில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியான "லைகர்" திரைப்படம் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கான விளம்பரம் பெரிய அளவில் நடைபெற்ற நிலையில் காலையில் முதல் காட்சி சென்ற ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.  பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இப்படத்தை எழுதி இயக்கிய இப்படமா இது என நொந்துக் கொள்ளும் அளவுக்கு இதன் திரைக்கதை இருந்தது. 






அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்க  ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் லைகர் படத்தில் நடித்துள்ளார். பலரின் எதிர்ப்பார்பை  ஏமாற்றிய லைகர் படம் தனது முதல் வார பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் பயங்கர பின்னடைவை பெற்றது.படம் வெளியான முதல் வாரத்தில் 46 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது. 


கட்டையைப் போட்ட ஆசிய கோப்பை போட்டி: 


கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப் பின் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் இதனால் லைகர் படத்தின் வசூல் கடுமையாக பாதித்தது. குறிப்பாக லைகர் படத்தின் இந்தி பதிப்பு ரூ.90 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. மொத்தமாக வார இறுதியில் லைகர் இந்தி பதிப்பு ரூ.13.75 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. 






இந்நிலையில் லைகர் படம் பெரும்பாலான தியேட்டர்களில் தூக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக 5வது நாளான நேற்று கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் படத்தின் 90 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த படங்களின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.