இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காஃபி வித் கரண்’ சீசன் 7 நிகழ்ச்சி அதன் முந்தைய் சீசன்களைப் போலவே கவனம் ஈர்த்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டே பங்குபெற்ற எபிசோட் நாளை ஒளிபரப்பாக உள்ளது.


பெர்சனல் பக்கங்கள்...


பொதுவாக இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கரண் ஜோஹர், நடிகர், நடிகைகளின் பர்சனல் பக்கங்கள், டேட்டிங் லைஃப் என அனைத்தையும் கிளறி ரேட்டிங்கை ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தவிர, விஜய் தேவரகொண்டா முதன்முறையாக கரணின் இந்த ஷோவில் பங்கேற்கும் நிலையில் இந்த எபிசோட் குறித்த ப்ரோமோக்கள் முன்னதாக வெளியாகி வைரலாகி உள்ளன.


இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய சில கேள்விகளை கரண் எழுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தனது டேட்டிங் லைஃப் குறித்து எல்லாரிடமும் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடில்லை என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.


2 குழந்தை பெத்ததும் சொல்லுவேன்...


”நான் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் அன்றும் இதுபற்றி கத்தி சொல்லுவேன். அதுவரை என்னை ரசிக்கும் என் ரசிகர்களை காயப்படுத்த நான் விரும்பவில்லை.  பலர் என்னை ஒரு நடிகராக விரும்புகிறார்கள்.. என் புகைப்படத்தை சுவர்களில் ஒட்டி வைத்திருப்பார்கள்.


அவர்கள் எனக்கு காதலையும் ஊக்கத்தையும் அளிக்கிறார்கள். நான் இந்தக் கேள்விக்கு பதிலளித்து அவர்களின் இதயங்களைப் புண்படுத்த விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.






ராஷ்மிகாவுடன் காதலா?


நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தொடர்ந்து சில ஆண்டுகளாக காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், ராஷ்மிகாவை மனதில் வைத்துத்தான் கரண் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கக்கூடும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே நடிப்பில், தெலுங்கு மாஸ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ’லைகர்’ படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்துக்கான விளம்பரப் பணிகளில் ஒருபகுதியாக காபி வித் கரண் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.