இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் இன்றோடு சினிமாவுக்கு வந்த 30 வருடங்கள் கழிந்திருக்கின்றன. ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலமாக விஜய்க்கு சினிமா கதவை தந்தை எஸ்.ஏ.சி திறந்து வைத்தாலும், ஆரம்பத்தில் அந்த பாதையில் நடைபோட விஜய் திணறினார் என்பதே நிதர்சனம். 




ஆம், நாளைய தீர்ப்பு படத்திற்கு அவர் நடிப்பில் வெளியான  ‘ரசிகன்’‘தேவா’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ கமர்ஷியலாக ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆனாலும், அதில் விஜய்க்கு பெரிதளவுக்கு பெயர் கிடைக்கவில்லை. இதற்குள் எதிர்மறை விமர்சனங்களும் அடங்கும். அனைத்தையும் உள்வாங்கி கொண்ட விஜய், முயற்சி என்ற ஒற்றை நம்பிக்கையை பிடித்து நடை போட்டார். அந்த முயற்சி வீண் போகவில்லை. 


1996 ஆம் ஆண்டு விக்ரமன் நடிப்பில் வெளியான ‘பூவே உனக்காக’ விஜய் பெரிய பிரேக்காக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வெளிவந்த  ‘லவ் டுடே’ படமும் விஜயை  சாக்லேட் பாயாக மக்களிடம் கொண்டு சேர்த்தது.  தொடர்ந்துவந்த  ‘துள்ளாத மனமும் துள்ளும்’  ‘மின்சாரக்கண்ணா’ ‘குஷி’ ‘பிரியமானவளே’ உள்ளிட்ட படங்கள் விஜயை அனைவருக்கும் பிடித்த கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது.


சாஃப்ட்டான கேரக்டரிலேயே நடித்த விஜய்யை, அடுத்ததாக வெளியான ‘திருமலை’ ‘கில்லி’,  ‘திருப்பாச்சி’   ‘சிவகாசி’‘போக்கிரி’ உள்ளிட்ட படங்கள் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அதில் அவர் பேசிய வசனங்களும், அதிரடி ஆக்சனும் அவரை மாஸ் ஹீரோ பட்டியலில் சேர்த்து வைதத்து. 




சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நோக்கி விறுவிறுவென சென்று கொண்டிருந்த விஜயின் சினிமா வாழ்க்கையில் பின்னர்தான் வீசியது தோல்வி புயல் வீசத்தொடங்கியது.  ‘அழகிய தமிழ் மகன்’ ‘ குருவி’ ‘வில்லு’  ‘சுறா’ என தொடர் ப்ளாப்.. விஜயின் கதை முடிந்தது என அவருக்கு ஆதரவாக இருந்த பலர், இரக்கமே இல்லாமல் விமர்சன கணைகளை வீசினர். என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்த விஜய் அனைத்தையும் அமைதி எனும் ஆயுதம் கொண்டே சமாளித்தார். 


அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான  ‘காவலன்’ படம் அவருக்கு ஆறுதல் வெற்றியை தர, அது சம்பந்தமான பேட்டி ஒன்றில் விஜயிடம் ‘ இப்படி அமைதியாகவே இருக்கிறீர்களே.. இது உங்களுக்கு என்ன தருகிறது’ என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், இப்படி இருக்கிறதால் என்ன கிடைக்கிறது என்றெல்லாம் எனக்கு தெரியுது. ஆனால் இதை வைத்து பல விஷயங்களை சாதித்து இருக்கிறேன்’ என்றார் விஜய். 




அவர் சொன்ன அந்த வார்த்தையை பின்னாளில் நம்மை கண்கூடாக பார்க்க வைத்தார் விஜய்.  இதனையடுத்து வெளியான ‘வேலாயுதம்’ திரைப்படம் அவரின் கமர்ஷியல் மீட்டரை, கையில் கொடுக்க அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய், பாதையை மாற்றி ஷங்கரின் ‘ நண்பன்’ படத்தில் இணைந்தார். எந்தவித ஆக்‌ஷனும் இல்லாமல், அதில் அவர் செய்திருந்த மாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.




இதனையடுத்து முருகதாஸூடன் இணைந்த  ‘துப்பாக்கி’ படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்க, அதனை தொடர்ந்து வந்த  ‘தலைவா’ அரசியல் சூழ்ச்சியால் தோல்வியடைய நொந்து போனார் விஜய். அதனைத்தொடர்ந்து வந்த  ‘ஜில்லா’ தோல்வியடைய, மீண்டும் முருகதாஸூடன் ‘ கத்தி’ படத்தில் இணைந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க, விஜயின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் பட்டம் மறுபடியும் மீள ஆரம்பித்தது. இதனிடையே வெளியான பைரவா ப்ளாப் ஆக, ஷங்கரின் உதவியாளரான அட்லியுடன்  ‘தெறி’ படத்தில் இணைந்தார். படம் பிளாக் பஸ்டர் ஆக,  தொடர்ந்து  ‘மெர்சல்’ ‘பிகில்’ என இரண்டு படங்களை அட்லியிடம் கொடுத்தார். 


இதற்கிடையே முருகதாஸ் இயக்கத்தில் வெளியான  ‘சர்கார்’ படத்தில் அரசியலை அனல்பறக்க செய்த விஜய், மேடைகளிலும் தைரியமாக சில விஷயங்களை பேசி அரசியல் வருகையையும் உறுதி செய்தார். சரி விஜயின் அடுத்த மூவ் என்ன என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜூடன் ‘மாஸ்டர்’ படத்தில் இணைந்தார் விஜய். 50 சதவீத விஜய் படமாகவும், 50 சதவீத லோகேஷ் படமாகவும் வெளிவந்த இந்தப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனக்களை பெற்றது. அடுத்தாக, வெளியான பீஸ்ட் அட்டர் ப்ளாப் ஆக, அடுத்ததாக இயக்குநர் வம்சியுடன் இணைந்தார். படத்தின் போஸ்டர்களும், ரஞ்சிதமே பாடலும் எகிடு தகிடு ஹிட்டடித்து இருக்க, மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக மாறுவாரா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது கோலிவுட்.. சாம்ராஜ்யம் தொடரட்டும் விஜய்