விஜயை வைத்து விவசாயிகள் தற்கொலை குறித்தும் அழுத்தமாக பேசும் நாவல் கதை வெற்றிமாறன் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்றால் முதல் வரிசையில் நிற்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் இயக்கி 5 படங்களுமே மெகா ஹிட் ஆனவை. வாய்ப்பு கிடைக்கிறதே என்று அடுத்தடுத்து படங்களை இயக்காமல் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து இயக்கி வருபவர் வெற்றிமாறன்.


5 படங்களுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை அல்லது அதிகாரத்தால் பாதிக்கப்படும் சாமானியர்களின் கஷ்டத்தை அல்லது கலாச்சாரத்தை பேசி இருக்கும். குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் வெற்றிமாறன் புகழை உலகெங்கும் கொண்டு  சென்றது. ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படும் தலித் மக்களின் துயரங்களை சமரசமின்றி பேசி இருப்பார் வெற்றிமாறன்.


உதவி இயக்குநர்களின் கதையை எடுத்து படம் செய்வது, கதைத் திருட்டு போன்ற சர்ச்சைகளில் சிக்காமல் நல்ல நாவல்களை தேர்ந்தெடுத்து அதை எழுத்தியவர்களிடம் உரிய அனுமதி பெற்று படங்களை இயக்குவது வெற்றிமாறனின் வழக்கம். அப்படி பூமணியின் “வெக்கை” நாவல் கதை கொண்டு உருவானது தான் அசுரன்.


அசுரன் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் வெற்றிமாறனிடம் கதை கேட்டதாக தகவல் வெளியாகின. இதற்கிடையே வெற்றிமாறன், சூர்யா நடிக்கும் வாடிவாசல், சூரியை வைத்து விடுதலை படங்களின் பணியில் பிசியாகிவிட்டார் வெற்றிமாறன்.  நடிகர் விஜய்யும் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.


இந்த நிலையில்தான் விஜய்க்காக விவசாயம் சார்ந்த நாவல் கதையை வெற்றிமாறன் தேர்வு செய்துள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார். விஜய் அழைத்தவுடன் ஏதோ ஒரு கதையை சொல்லாமல், அவர் மூலம் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசும் கதையை தேர்வு செய்து இருப்பதாக பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.



கோட்டா நீலிமா


 


ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த கோட்டா நீலிமா என்ற பெண் எழுத்தாளர் எழுதிய 2013-ஆம் ஆண்டு வெளியான SHOES OF THE DEAD என்ற நாவல் கதையை விஜய் படத்துக்கு வெற்றிமாறன் தேர்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. கடன் சுமையால் தற்கொலை செய்யும் விவசாயிகளுக்கு நிவாரணம் தர மறுக்கும் அரசை எதிர்த்து போராடும் நாயகன் கதாப்பாத்திரத்தில் விஜய் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விசாரணை படத்தின் வெற்றிக்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டே இந்த நாவலை வைத்து படம் இயக்க வெற்றிமாறன் முடிவு செய்து இருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகின. இதற்கு நாவலின் ஆசிரியர் கோட்டா நீலிமா ட்விட்டரில் நன்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தான் இக்கதையில் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.






ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான விவசாயிகள் தொடர்பான கத்தி படம் மெகா ஹிட் வெற்றி பெற்றது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல விவசாயிகள் படங்கள் வந்தாலும் கத்தி அளவுக்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை. தற்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,  விஜய் விவசாயிகள் சார்ந்த படத்தில் நடிப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்து உள்ளது. வெற்றிமாறனுக்கும், விஜய்க்கும் இந்திய அளவில் ரசிகர்கள் இருப்பதால் இது பல மொழிகளில் தேசிய அளவில் வெளியாகும் PAN INDIA படமாக வெளியாக வாய்ப்பு இருப்பதாக பத்திரிகையாளர் பிஸ்மி கணித்துள்ளார்.