அரசியலில் விஜய்க்கு அறிவுரை சொல்ல வேண்டிய இடத்தில் நான் இல்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் என பலரும் வாழ்த்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தமிழ்நாடே சோகத்தில் மிதக்கும் நிலையில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு விஜய் ரசிகர்களுக்கும், த.வெ.க. தொண்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதனால் எளிமையான முறையில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. 


இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம், “விஜய்யின் அரசியல் எண்ட்ரீ குறித்தும், ஒரு சீனியராக நீங்கள் என்ன அறிவுரை வழங்குவீர்கள்” என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நாம் பொதுமக்கள் பக்கம் நிற்கிறோம். அப்படியாக நாம் வாக்களிக்க போகும்போது அரசியல்வாதிகள் மீது பல விஷயங்களில் கோபம் வருகிறது. என்ன ஆட்சி செய்றாங்க, இதை சரியாக பண்ணவில்லை என திட்டுகிறோம். அப்படி இவ்வளவு நாள் விஜய் இந்த மக்கள் பக்கம் தான் இருந்தாரு.


இப்போது தான் கோட்டை கடந்து அரசியல் பக்கம் போகுறாரு. அப்ப ஏதோ இவருக்கு கோபம் இருந்துருக்குல. அரசியல்வாதிகள் நமக்கு சரியா பண்ண வேண்டியதை பண்ணல, கிடைக்க வேண்டியது கிடைக்கல. என்னால் அதை பண்ண முடியும் என நினைத்து தானே கோட்டை தாண்டி போயிருக்காரு. அப்ப நம்மை விட விஜய்க்கு நல்ல தெளிவு இருக்கிறது. பொதுமக்களாக விஜய் சந்தித்து சகித்த, சலித்த, சகித்துக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றவோ, திருத்தவோ முயல்கிறார். அதனால் விஜய்க்கு அறிவுரை சொல்ல வேண்டிய இடத்தில் நான் இல்லை” என ஜேம்ஸ் வசந்தன் பதிலளித்தார்.  இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


2026 தான் என்னுடைய இலக்கு 


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்ற குறிக்கோளுடன் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். அவருடைய அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ச்சியாக கிளம்பி வருகின்றது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஆளும் திமுக அரசு கண்டனம் தெரிவித்திருந்தது மிகப்பெரிய பேசுபொருளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.