கள்ளக்குறிச்சி மக்களின் துயரில் பங்கேற்கும் பொருட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்த உத்தரவிட்ட நிலையில் தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இன்று 50வது பிறந்தநாளாகும். இந்த பிறந்தநாளை அலப்பறையுடன் சிறப்பாக ஊரே வியக்கும் வண்ணம் கொண்டாட அவரது ரசிகர்களும், த.வெ.க., தொண்டர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். இதற்காக அன்னதானம், ரத்ததானம்,பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தல், ஏழை மக்களுக்கு உடை வழங்குதல் என பல சமூக நலத்திட்ட பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டது. 


இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. நேற்று முன்தினம் விஜய் கள்ளக்குறிச்சி சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு ஒன்றை வெளியிட்டார். 






அதில், “தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவு! தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


ஆனால் 50வது பிறந்தநாள் என்பதால் எப்படி கொண்டாடாமல் இருக்க முடியும் என ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் புலம்பி தவித்துள்ளனர். எனவே இன்றைய தினம் கேக் வெட்டி, கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தாமல் பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மட்டும் வழங்கி பிறந்தநாளை கொண்டாடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னொரு நாளில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக கொண்டாடப்படும் என த.வெ.க. தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.