Beast vs KGF 2 போட்டாப்போட்டி களைகட்டியுள்ள நிலையில் யாருக்கு எத்தனை திரையரங்குகள் ஒதுக்கீடு என்ற நிலவரம் வெளியாகியுள்ளது.


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில்  நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது.


அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில்  ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அடுத்ததாக அண்மையில் படத்திலிருந்து ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று பீஸ்ட் படத்தின் மூன்றாவது சிங்கிளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த 6 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 




கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு சமீபத்தில் அறிவித்தது. வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், இந்தப் படத்திற்கான புக்கிங்கும் விறுவிறுப்பாக நடக்கிறது. இரண்டு படங்களுக்கும் தமிழகத்தில் எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இது குறித்து தமிழ்நாடு திரை விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பீஸ்ட் படத்திற்கு 800 திரையரங்குகளும், கேஜிஎஃப் சேப்டர் 2 படத்திற்கு 250 திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக நேற்று, கேஜிஎஃப் குழு படத்தின் புரோமோஷனை சென்னையில் மேற்கொண்டது. அப்போது படத்தின் நடிகர் யாஷ், திரையரங்குகள் குறைவாக இருப்பதால் வருத்தம் ஏதும் இல்லை. நாங்கள் மக்களை நம்புகிறோம். வெற்றி பெறுவோம் என்றார்.