ரஹ்மான் பாட்டை நிராகரித்த விஜய்
விஜயின் பல படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து சூப்பர்ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார். உதயா , அழகிய தமிழ் மகன் , மெர்சன் , பிகில் , சர்கார் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இதில் பரதன் இயக்கிய அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற விஜயின் அறிமுக பாடல் " எல்லாம் புகழும் இறைவனுக்கே' பாடல் ரசிகர்களால் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பாடல் உருவான பின்னணி குறித்து படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல் பிடிக்காததால் விஜய் கடுமையாக நடந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடுப்பான ஏ.ஆர் ரஹ்மான்
அழகிய தமிழ் மகன் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வர்கசித்ரா அச்சப்பன் கூறுகையில் " ஏ.ஆர் ரஹ்மான் படத்தின் இயக்குநர் பரதன் , நடிகர் விஜய் யாரிடமும் நேரடியாக பேசவில்லை. என்னிடம் மட்டுமே பேசி படத்திற்கு இசையமைத்தார். ஓப்பனிங் சாங் ரெடியானதும் நான் விஜய் வீட்டிற்கு சென்று போட்டு காட்டினேன். விஜயின் முகம் வாடிவிட்டது. அது ஒரு ஸ்லோவான பாட்டு . விஜய்க்கு பாட்டு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அவருக்கு டப்பாங்குத்து பாட்டுதான் வேண்டும் . நான் உடனே வேற பாட்டு போடலாம் என்றேன். ரஹ்மானிடம் யாரும் பாட்டு நன்றாக இல்லை என்று வேற பாட்டு கேட்கமாட்டார்கள். ரஹ்மானும் போட்டுதரமாட்டார். விஜய்க்கும் நம்பிக்கை இல்ல. நான் பேசிப் பார்க்கிறேன் என்று சொன்னேன். ஒரு காப்பி கூட கொடுக்காமல் விஜய் கோபமாக கிளம்பி சென்றார். நான் நேராக ரஹ்மானின் ஸ்டுடியோ சென்று அவரை சந்தித்தேன். ஹீயோவுக்கு பாட்டு பிடிக்கவில்லை என்று சொன்னேன். ஹீரோவுக்கு பிடிக்கவில்லையா உங்களுக்கும் பிடிக்கவில்லையா என்று கேட்டார். எனக்கு டப்பாங்குத்து மாதிரியான ஒரு பாட்டு வேண்டும் என்று சொன்னேன். ரஹ்மான் ரொம்ப கடுப்பாகிவிட்டார். உடனே வாலி சாருக்கு ரஹ்மான் ஃபோன் செய்தார். வாலி சார் அப்போது ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அவர் எழுதிகொடுத்த பாட்டுதான் 'எல்லாம் புகழும் இறைவனுக்கே'. அந்த பாட்டை எடுத்துக் கொண்டு நான் சந்தோஷமாக விஜய் வீட்டிற்கு சென்றேன். பாட்டை கேட்டு விஜய் சார் கண் கலங்கிவிட்டது. " என்று கூறியுள்ளார்.
அழகிய தமிழ் படத்திற்கு பின் 10 ஆண்டுகள் விஜயின் எந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.