தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை :
சடலமாக மீட்கப்பட்ட மீராவின் உடலை மீட்ட தேனாம்பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாகவே மீரா மனசோர்வுடன் காணப்பட்டதாகவும் மனஅழுத்ததில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுமியின் உடற்கூறாய்வு நடந்து முடிந்த நிலையில் சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் பலரும் சோசியல் மீடியா மூலம் ஆழ்ந்த இரங்கலை விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு தெரிவித்து வருகிறார்கள்.
மனதை சங்கடப்படுத்தும் போஸ்ட் :
விஜய் ஆண்டனியின் தந்தை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இப்போது தனது செல்ல மகளும் தற்கொலை செய்து கொண்டது அவரை நிலைகுலைய செய்துள்ளது. விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தனது மகளை நினைத்து பெருமிதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட ட்வீட் ஒன்று தற்போது அனைவரின் கவனம் பெற்று மனதை நெருட செய்கிறது. பாத்திமா போஸ்ட் செய்து இருந்த அந்த ட்வீட்டில் " என வலிமைக்கு பின்னால் இருக்கும் சக்தி நீ, ஏன் கண்ணீருக்கு ஆறுதலாய் இருந்தவள் நீ, உன்னுடைய அதிகமான குறும்புத்தனத்தால் என் மன அழுத்தத்திற்கு காரணமான என் தங்ககட்டி, செல்லக்குட்டி மீரா விஜய் வாழ்த்துக்கள் பேபி " என்ற ஒரு அன்பான குறிப்புடன் தனது மகள் கடந்த மார்ச் மாதம் அவள் படிக்கும் பள்ளியின் கல்ச்சுரல் செக்ரெட்டரியாக தேர்ந்து எடுக்கப்பட்டதை மிகவும் சந்தோஷத்துடன் பகிர்ந்து இருந்தார் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா.
தமிழ் சினிமாவில் துள்ளலான பல ஹிட் படங்களை கொடுத்து பிரபலமாக இருந்த இசைமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தொடர்ந்து நடிகராக ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி பெரும் காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். இந்த நிலையில் தற்போது அவரின் செல்ல மகளின் இழப்பு அவருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.